என் - னின் எய்தியதன்மேற் சிறப்புவிதி உணர்த்துதல் நுதலிற்று. மோனைத் தொடைக்கும் எதுகைத் தொடைக்கும் எடுத்த வெழுத்தே வருதலன்றி வருக்க வெழுத்தும் உரிய என்றவாறு. "பகலே, பல்பூங் கானற் கிள்ளை ஒப்பியும் பாசிலைக் குளவியொடு கூதளம் விரைஇய பின்னுப்பிணி அவிழ்ந்த நன்னெடுங் கூந்தல் பீர்ங்கப் பெய்து தேம்படக் கருதி." (யாப். வி. ப. 135) என்பது வருக்கமோனை."ஆறறி அந்தணர்க் கருமறை பலபகர்ந்து தேறுநீர் சடைக்கரந்து திரிபுரம் தீமடுத்துக் கூறாமற் குறித்ததன்மேற் செல்லுங் கடுங்கூளி மாறாப்போர் மணிமிடற் றெண்கையாய் கேள்இனி." (கலித் கடவுள்வாழ்த்து) என்பது வருக்கவெதுகை. பிறவுமன்ன.(88)
|