செய்யுளியல்

400மொழியினும் பொருளினும் முரணுதல் முரணே.

என்-னின். முரணாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

அடிதொறும் வந்த சொல்லினானாதல் பொருளினானாதல். மாறுபடத்தொடுப்பது அடிமுரண்தொடையாம் என்றவாறு.

சொல்முரணாவது சொல்லானன்றிப் பொருளான் மாறுபடாமை பொருள்முரணாவது மாறுபாடுடைய பொருளைச் சொல்வது.

"இரும்பின் அன்ன கருங்கோட்டுப் புன்னை
பொன்னின் அன்ன நுண்தா துறைக்கும்."

(யாப்.வி.ப.146)

என்பது இரும்பும் பொன்னும் மாறுபாடுடைத்தாதலிற் பொருள்முரண் ஆயிற்று.

"சிறுகுடிப் பரதவர் மடமகள்
பெருமதர் மழைக்கணும் உடையவால் அணங்கே."

(யாப்.வி.ப.146)

என்றவழிக் குடியுங் கண்ணு மாகாது சிறுமைபெருமை என்னும் சொல்லே மாறுகோடலிற் சொன்முரணாயிற்று.
(89)