என்-னின். இயைபுத்தொடை யாமாறு உணர்த்துதல் நுதலிற்று. அடிதோறும் ஈற்றெழுத்து ஒன்றிவரின் அஃது இயைபுத்தொடை என்று சொல்வர் என்றவாறு. "இன்னகைத் துவர்வாய்க் கிளவியும் அணங்கே நன்மா மேனிச் சுணங்குமார் அணங்கே ஆடமைத் தோளி கூடலும் அணங்கே அரிமதர் மழைக்கணும் அணங்கே தருநுதற் பொறித்த திலதமும் அணங்கே." (யாப்.வி.ப.153) எனவரும். அசை சீரென வரையாது கூறினமையான் ஓரெழுத்து இறுதிக்கண் ஒப்பினும் இயைபாம் என்றுகொள்க. (90)
1. 'இறுவாய் ஒன்றல்' என்றான் ஆயினும் ஆண்டு ஒன்றுவது பொருள் இயைபின்றி எழுத்தும் சொல்லும் ஒன்றி அடையின் இயைபாம் என்பது. எனவே எழுத்தடி இயைபும் சொல்லடி இயைபும் என இத்தொடை இரண்டாயின.(தொல். பொருள். 408. பேரா.) 2. (பாடம்) ஒன்றல் இயைபின் யாப்பே.
|