செய்யுளியல்

404இருசீர் இடையிடின் ஒரூஉவென மொழிப.
என்-னின. ஒரூஉத்தொடை யாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இரண்டு சீர் இடையிட்டு மோனை முதலாயின வரத்தொடுப்பது ஒரூஉத் தொடையாம் என்றவாறு.

'அம்பொற் கொடிஞ்சி நெடுந்தேர் அகற்றி.'

(யாப்.வி.ப.130)

என்பது ஒரூஉமோனை.

'மின்னிவர் ஒளிவடந் தாங்கி மன்னிய.'

(யாப்.வி.ப.134)

என்பது ஒருஉவெதுகை.

'குவிந்துசுணங் கரும்பிய கொங்கை விரிந்து.'

(யாப்.வி.ப.147)

என்பது ஒரூஉமுரண்.

'நிழலே இனியதன் அயலது கடலே.'

(யாப்.வி.ப.153)

என்பது ஒரூஉவியைபு.

'காஅய்ச் செந்நெற் கறித்துப் போஒய்.'

(யாப்.வி.ப.158)

என்பது ஒரூஉஅளபெடை.

(93)