என்-னின். செந்தொடை யாமாறு உணர்த்துதல் நுதலிற்று. மேற்சொல்லப்பட்ட தொடையும் தொடை விகற்பமும் போலாது வேறுபடத் தொடுப்பது செந்தொடையாம் என்றவாறு. "பூத்த வேங்கை வியன்சினை ஏறி மயிலினம் அகவும் நாடன் நன்னுதற் கொடிச்சி மனத்தகத் தோனே." (யாப்.வி.ப.179) எனவரும். இனி நிரனிறுத்தியற்றலும் இரட்டையாப்பும் மொழிந்தவற்றியலான் (செய்யுளியல். 87) வருமாறு. "அடல்வேல் அமர்நோக்கி நின்முகங் கண்டே உடலும் இரிந்தோடும் ஊழலரும் பார்க்குங் கடலுங் கனையிருளும் ஆம்பலும் பாம்புந் தடமதி யாமென்றுதாம்.' (யாப்.வி.ப.182) இது பொருளான் வேறுபட்ட துணையல்லது எழுத்தான் வேறுபடாமையின் எதுகைத் தொடையாயிற்று. இனி,இரட்டைத் தொடை வருமாறு: "ஒக்குமே ஒக்குமே ஒக்குமே யொக்கும் விளக்கினிற் சீறெரி ஒக்குமே ஒக்கும் குளக்கொட்டிப் பூவின் நிறம்." (யாப்.வி.பக்.180) இதுவுஞ் சொல்லிய தொடைப்பாற் பட்டவாறு காண்க.இணைமோனை, கூழைமோனை, மேற்கதுவாய்மோனை, கீழ்க்கதுவாய் மோனை, முற்றுமோனை முதலாயினவும் அந்தாதித் தொடையுங் கூறாத தென்னையெனின். 'தெரிந்தனர் விரிப்பில் வரம்பில வாகும்' என வருகின்ற சூத்திரங் கூறுகின்றாராதலின், அச்சூத்திரத்தின்காறும் பாட்டிற் இன்றியமையாத தொடையுணர்த்தினாரென்று கொள்க. (94)
1. இவ்வாறு தொடை கூறப்பட்ட தொடைப்பகுதி எல்லாம் அவ்வச் சூத்திரங்கள்தோறும் எடுத்தோதாது கட்டளை அடிக்கும் அல்லாவடிக்கும் பொதுவகையாற் கூறிவந்தான் ஆசிரியனாயினும் 'மெய்பெறு மரபிற்றொடை வகை' என்னும் தொடைச்சூத்திரத்திற்கேற்பதாம் .... முற் கூறிய 33 தொடையினையும் 625 அடியோடு மாறியக்கால் 20625 தொடை ஆகற்பாலனவாம்; அன்னவை தொடைக்கும் தளைக்கும் ஆகாதனகளைந்து கொள்ள 13705 ஆயின என்பது. 1920 நிலம் களையப்பட்டன. இங்ஙனம் இவை களைந்து பெற்ற தொடையோடும் இரண்டடி எதுகை இரண்டும் இடையீடு ஒன்றும் கூட்டத் தொடை 13708 ஆயின. (தொல். பொருள். 412.பேரா.)
|