என்-னின். மேற்சொல்லப்பட்ட தொடை யெல்லாம் விரிவகை யான் உணர்த்துதல் நுதலிற்று. வடிவுபெற்ற மரபினையுடைய தொடையினது பாகுபாடு பதின்மூவாயிரத்தறு நூற்றுத்தொண்ணூற் றொன்பது என்றவாறு. அவையாமாறு:-மொழிமுதலாகிய எழுத்து உயிர் பன்னிரண்டு. இதன்கிளை யெழுத்து ஒரோவொன்றிற்குப் பதினொன்றுளவாகலின் அவற்றை உறழ. நூற்று முப்பத்திரண்டாம். 'கதநபம' என்பவற்றை உயிர் பன்னிரண்டோடுறழ அறுபதாம்;அவ்வறுபதையும் முதற்றொடையாக்கிக் கிளையெழுத்தோடுறழ அறுநூற்றறுபதாம். சகரத்தின் முதலாகெழுத்து ஒன்பது; அவற்றைக் கிளையெழுத்தோடுறழ எழுபத்திரண்டாம். வகரத்தின் முதலாகெழுத்து எட்டு; அவற்றைக் கிளையெழுத்தோடுறழ ஐத்பத்தாறாம். யகரத்தின் முதலாகெழுத்து ஒன்று; கிளையெழுத்தில்லை. ஞகரத்தின் முதலாகெழுத்து மூன்று; அவற்றைக் கிளையெழுத்தோடுறழ ஆறாம். இவ்வகையினான் முதலெழுத்துத் தொண்ணூற்றுமூன்றுங் கிளையெழுத்துத் தொளாயிரத்திருபத்தாறும் ஆக மோனைத்தொடை ஆயிரத்தொருபத் தொன்பதாம். எதுகையாமாறு;- உயிரெழுத்து மொழியிடையில் வாராது. உயிர் மெய்யெழுத்து இருநூற்றொருபத்தாறில் ஙவ்வருக்கம் ஒழிந்த எழுத்து இரு நூற்றுநாலினையுங் கிளையெழுத்தினோடு உறழ இரண்டாயிரத்து நானூற்று நாற்பத்தெட்டாம் இதனொடு ஒற்றுப் பத்தொன்பதூங் குற்றுகரம் ஆறுங் கூட்ட எதுகைத்தொடை இரண்டாயிரத்து நானூற்று எழுபத்துமூன்று பாகுபாடாம். முரண்தொடை சொன்முரண் பொருண்முரண் என இரண்டாம். இயைபுத்தொடையாமாறு;- உயிரெழுத்து மொழியீற்றின்கண் உயிர் மெய்யாகி வருதலின் அவையாகா உயிர்மெய் இருநூற்றொருபத்தாறில் இறுதிக்கண் வாராத ஙகரவுயிர்மெய் பன்னிரண்டும் அகரம் பதினேழும் இகரம் பதினாலும் உகரம் இரண்டும் எகரம் ஒன்றும் ஒகரம் ஒன்றும் இவை ஒழிந்து நின்ற எழுத்து நூற்றறுபத்தைந்தும் ஞணநமனயரலவழள என்னும் புள்ளியிறுதி பதினொன்றும் ; குற்றுகரவீறு ஆறும் ஆக இயைபுத் தொடை நூற்றெண்பத்திரண்டு பாகுபாடம். அளபெடைத்தொடையாமாறு;- மொழிமுதலாகு முயிரளபெடை ஏழு. கதநபம என்னும் உயிர்மெய்யளபெடை முப்பத்தைந்து. சகர அளபெடை ஐந்து, வகர அளபெடைஐந்து, யகர அளபெடை இரண்டு, இவை ஐம்பத்துநான்கில் உயிரளபெடை தனிநிலையாம் , ஏனையவற்றை முதனிலை இடைநிலை இறுதிநிலை எனவுறழ நூற்றுநாற்பத்தொன்றாம் . ஒற்றுக்களுள் வல்லெழுத்தாறும் மகரமும் ழுகரமும் ஒழித்து ஏனைய பதினொன்றும் அளபெடுக்க ஒற்றளபெடை பதினொன்றாம் . இவ்வகையினான் அளபெடைத் தொடை நூற்றைம்பத்தொன்பது வகையாம். இவ்வகையினோடு இத்தொடை மூவாயிரத் தெண்ணூற்று முப்பத்தைந்து வகையாம். பொழிப்புத் தொடையிற் கிளையெழுத்து வாராது. மோனைப்பொழிப்புத் தொண்ணூற்றுமூன்று, எதுகைப்பொழிப்பு இருநூற்றிருபத் தொன்பது, முரண்பொழிப்பு இரண்டு, இயைபுப்பொழிப்பு நூற்றெண்பத்திரண்டு; அளபெடையுள் ஒற்றளபெடை பொழிப்பாகி வாராமையின் உயிரளபெடைப் பொழிப்பு நூற்று நாற்பத்தெட்டு, இவையெல்லாங் கூட்டப் பொழிப்புத்தொடை அறுநூற்றைம்பத்து நூலு வகையாம். ஒரூஉத்தொடையும் இவ்வகையினால் அறுநூற்றைம்பத்து நாலாம். இனிச் செந்தொடையாமாறு மொழிமுதலாகும் எழுத்துத் தொண்ணூற்று மூன்று. மற்றையடியினு மொத்து வருங்கால் அவை மோனையுள் அடங்குதலின் அவற்றை ஒழித்து ஏனை யெழுத்துத் தொண்ணூற்றிரண்டோடும் உறழ எண்ணாயிரத்தைந் நூற்றைம்பத்தாறு வகையாம். இவ்வகையினால் தொடைவிகற்பம் பதின்மூவாயிரத் தறுநூற்றுத் தொண்ணூற்றொன்பதாம். (95)
1. பதின்மூவாயிரத்தறுநூற்றுத் தொண்ணூற்றொன்பது என்ற தொகை பெறுதற்கு 'றொன்று மென்ப வுணர்ந்திசி னோரே' எனப் பாடங் கொண்டதாகக் கருதுவர் பேராசிரியர் முதலியோர். ஆயினும் கிடைத்த எட்டுப்படிகள் இரண்டிலும் உள்ளபடியே இங்குப் பதிப்பிக்கலாயிற்று. யாப்பருங்கல விருத்தியிற் (பக்.174) காட்டப்பெறும் சங்க யாப்புடையார் சூத்திரம் இத்தொகை வரலாற்றுமுறையில் வந்துள்ளதே யென வற்புறுத்துகின்றது.
|