என்-னின் எய்தியதன்மேற் சிறப்புவிதி உணர்த்துதல் நுதலிற்று. மேற்சொல்லப்பட்ட தொடையினை ஆராய்ந்து விரிப்பின் வரம்பிலவாகி விரியும் என்றவாறு. அவையாவன மோனை, எதுகை, முரண், இயைபு, அளபெடை என்பனவற்றின்கண் இணை, கூழை, முற்று, மேற்கதுவாய் , கீழ்க்கதுவாய், கடை, கடையிணை , கடைக்கூழை, இடைப்புணரென வேறுபடுத் துறழ்ந்தும் , எழுத்தந்தாதி அசையந்தாதி சீரந்தாதி , அடியந்தாதி எனவும் , உயிர் மோனை உயிரெதுகை நெடில்மோனை நெடிலெதுகை வருக்கமோனை வருக்க எதுகை இனமோனை இனவெதுகை ஆசெதுகை எனவும் , மூன்றாமெழுத்தொன்றெதுகை இடையிட்டெதுகை எனவும் , இவ்வாறு வருவனவற்றை மேற்கூறிய வகையினான் எழுத்து வேறுபாட்டினா னுறழவும் , நிரனிறையாகிய பொருள்கோள் வகையானும் ஏகபாதம் எழுகூற்றிருக்கை முதலாகிய சித்திரப்பாக்களானும் உறழவும் , வரம்பிலவாகி விரியும் . அவற்றுட் சிலவருமாறு;- இணையாவது முதலிருசீர்க்கண்ணும் மோனைமுதலாயினவரத் தொடுப்பது. கூழையாவது முந்துற்ற மூன்று சீரினும் வந்து இறுதிச்சீரின் வாராத்து. 'அணிமலர் அசோகின் தளிர்நலங் கவற்றி.' (யாப்.வி.ப.130) இஃது இணைமோனை. 'பொன்னின் அன்ன பொறிசுணங் கேந்தி.' (யாப்.வி.ப.134) இஃது இணையெதுகை:'சீறடிப் பேரகல் அல்குல் ஒல்குபு.' (யாப்.வி.ப.147) இஃது இணைமுரண்:'மொய்த்துடன் தவழு முகிலே பொழிலே.' (யாப்.வி.ப.153) இஃது இணையியைபு:'தாஅட்டாஅ மரைமல ருழக்கி.' (யாப்.வி.ப.158) இஃது இணையளபெடை: எனவரும் இனிக் கூழை வருமாறு;-
'அகன்ற அல்குல் அந்நுண் மருங்குல்.' (யாப்.வி.ப.130) இது கூழைமோனை:'நன்னிற மென்முலை மின்னிடை வருந்த.' (யாப்.வி.ப.134) இது கூழையெதுகை:'சிறிய பெரிய நிகர்மலர்க் கோதைதன்.' (யாப்.வி.ப.147) இது கூழைமுரண்:'மாதர் நகிலே வல்லே இயலே.' (யாப்.வி.ப.153) இது கூழையியைபு:'மாஅத் தாஅண் மோஒட் டெருமை.' (யாப்.வி.ப.158) இது கூழையளபெடை எனவரும். முற்றாவது நான்கு சீரும் ஒத்துவருவது. 'அயில்வேல் அனுக்கி அம்பலைத் தமர்த்த.' (யாப்.வி.ப.130) இது முற்றுமோனை: பிறவுமன்ன. இனி மேற்கதுவா யாவது நான்கு சீரினும் இரண்டாஞ் சீரொழிய ஏனைய வருவது. 'அரும்பிய கொங்கை அவ்வளை அமைத்தோள்.' (யாப்.வி.ப.131) பிறவுமன்ன.கீழ்க்கதுவா யாவது மூன்றாஞ் சீரொழிய ஏனைய வருவது. 'அவிர்மதி அனைய திருநுதல் அரிவை.' (யாப்.வி.ப.131) பிறவுமன்ன.அந்தாதித்தொடைக்குதாரணம்:-"உலகுடன் விளங்கும் ஒளிதிகழ் அவிர்மதி மதிநலன் அழிக்கும் வளங்கெழு முக்குடை முக்குடை நீழல் பொற்புடை ஆசனம் ஆசனத் திருந்த திருந்தொளி அறிவன் ஆசனத் திருந்த திருந்தொளி அறிவனை அறிவுசேர் உள்ளமொ டருந்தவம் புரிந்து துன்னிய2 மாந்தர் அஃதென்ப பன்னருஞ் சிறப்பின் விண்மிசை உலகே." (யாப்.வி.ப.185) இவ்வகையினான் ஒருபாட்டிறுதி மற்றைப்பாட்டி னாதிச்சீராகி வருதல் கொள்க.இத்துணையுங் கூறப்பட்டன சிறப்புடையவென ஒரு நிகராகக் கூறுப. இனி மீன்தேர்ந்3 தருந்திய சருங்கால் வெண்குருக. (யாப்.வி.ப.148) இது கடையிணை முரண். பின்முரணாவது நாலாஞ்சீரும் இரண்டாஞ்சீரு மொன்றத் தொடுப்பது: அது 'கொய்ம்மலர் குவிந்து தண்ணிழல் விரிந்து.' (யாப்.வி.ப.148) எனவரும்.கடைக் கூழை முரணாவது முதற்சீரொழித்து மூன்றுசீரும் ஒத்து ஒருவது உதாரணம் வந்தவழிக் காண்க. இடைப்புணர் முரணாவது இடையிருசீரும் ஒன்றத் தொடுப்பது :அது "போதுவிடு4 குறிஞ்சி நெடுந்தண் மால்வரைக் கோதையில் தாழ்ந்த ஓங்குவெள் அருவிக் காந்தளஞ் செங்குலைப் பசுங்கூ தாளி வேரல் விரிமலர் முகையொடு விரைஇப் பெருமலைச் சீறூர் இழிதரு நலங்கவர்ந் தின்னா வாயின இனியோர் மாட்டே." (யாப்.வி.ப.149) எனவரும். மோனை எதுகை இயைபு அளபெடையினும் இவ்வாற்றான் வருவன வந்தவழிக்காண்க. இனி , உயிர்மோனை யாவது முதலெழுத்தாகிவந்த உயிரெழுத்து மற்றை யடியினும் வருவது;அது 5"கயலேர் உண்கண் கலிழ நாளுஞ் சுடர்புரை6 திருநுதல் பசலை பாய." (யாப்.வி.ப136) எனவரும். எதுககைக்கும் இதுதானேயாம். நெடின்மோனையாவது நெட்டெழுத் தொத்துவருவது; "தாமின் புறுவ துலகின் புறக்கண்டு காமுறுவர் கற்றறிந் தார்." (குறள்.399) எனவரும்.நெடிலெதுகையாவது: "ஆவா என்றே அஞ்சினர் ஆழ்ந்தார்7 ஒருசாரார் கூகூ என்றே கூவிளி கொண்டார் ஒருசாரார்." (யாப்.வி.ப.139) எனவரும். இனவெதுகை மூன்றுவகை. "தக்கார் தகவிலர் என்ப தவரவர் எச்சத்தாற் காணப்படும்." (குறள்.114) இது வல்லின வெதுகை."அன்பீனும் ஆர்வம் உடைமை அதுஈனும் நண்பென்னும் நாடாச் சிறப்பு." (குறள்.74) இது மெல்லின வெதுகை."எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு." (குறள்.299) இஃது இடையின வெதுகை.மோனையும் இவ்வாறு வருவன பாகுபடுத்துக்கொள்க. ஆசெதுகையாவது இடையினவொற்று இடைவரத் தொடுப்பது. "காய்மாண்ட தெங்கின் பழம்வீழக் கமுகின் எற்றி பூமாண்ட தீந்தேன் தொடைகீறி வருக்கை போழ்ந்து தேமாங் கனிசிதறி வாழைப் பழங்கள் சிந்தும் ஏமாங் கதமென் றிசையால் திசை போய துண்டே." (சீவகசிந். 31) எனவரும். இதன்கண் யகரம் ஆசாகி வந்தது. பிறவுமன்ன.இனி இரண்டடியெதுகை யாவது முதலிரண்டடியு மோரடியாய்ப் பின்னிரண்டும் ஓரெதுகையாகி வருவது. "உலக மூன்றும் ஒருங்குட னேத்துமாண் திலக மாய திறலறி வன்னடி வழுவில் நெஞ்சொடு வாலிதின் ஆற்றவுந் தொழுவல் தொல்வினை நீங்குக என்றியான்." (யாப். வி.ப 139) எனவரும். இடையிட் டெதுகையாவது ஓரடி யிடையிட்டுத் தொடுப்பது. "தோடார் எல்வளை நெகிழ நாளும் நெய்தல் உண்கண் பைதல் உழப்ப8 வாடா வவ்வரி9 புதைஇப் பசலையும் வைகல் தோறும் பைபயப் பெருகின நீடார் அவரென நீமனங்10 கொண்டார் கேளார் கொல்லோ காதலர் தோழீஇ வாடாப் பவ்வ மறமுகந் தெழிலி பருவஞ் செய்யாது வலனேர்பு வளைஇ ஓடா மலையன் வேலிற் கடிது மின்னுமிக் கார்மழைக் குரலே." (யாப். வி.ப 143) எனவரும். இவ்வகையினான் மோனை வருவனவுங் கொள்க. பிறதொடையும் இவ்வகையினான் வருவனவும் கொள்க. மூன்றா மெழுத்தொன் றெதுகையாவது இரண்டா மெழுத்து ஒன்றாது மூன்றாம் எழுத்து ஒன்றுவது. இதுவும் அவ்வாறே உதாரணம் வந்தவழிக் காண்க. இவையெல்லாம் மேலெடுத்தோதப்பட்ட தொடைக்கட்படும். நாற் சீரடியொழிந்த அடிக்கண்ணும் இப்பாகுபாடெல்லாம் விரிப்பின் வரம்பிலவாகும். (96)
1. (பாடம்) பல்கும். 2. (பாடம்) துன்னுபுமாந்தரென்ப. 3. மீன் றேர்ந்து வருந்திய. 4. தேம்படுகுறுஞ்சுனை. 5. மேலும் யாப்பருங்கலவிருத்தியில் வல்லினமோனைக்குக் காட்டப் பட்டுள்ளது: இது; 6. (பாடம்) சுடர்புனை. 7. ஆழா வொருசாரர். 8. (பாடம்) கலுழ. 9. வாடாப்புலரி. 10. அலரென்னீர்மனங்
|