செய்யுளியல்

409மாத்திரை முதலா1 அடிநிலை காறும்
நோக்குதற் காரணம் நோக்கெனப் படுமே.
என்-னின். இது நோக்கென்னும் உறுப்பு உணர்த்துதல் நுதலிற்று.

மாத்திரை முதலாக அடிநிலையளவும் நோக்குதலாகிய கருவி நோக்கென்று சொல்லப்படும் என்றவாறு.

காரணமெனினுங் கருவியெனினும் ஒக்கும். நோக்குதற்காரண மென்பதனை உண்டற்றொழில் என்றாற்போலக் கொள்க.

அஃதாவது யாதானும் ஒன்றைத் தொடுக்குங் காலக்துக் கருதிய பொருளை முடிக்குங்காறும் பிறிதுநோக்காது அது தன்னையே நோக்கி நிற்கு நிலை. அடிநிலை காறும் என்றதனால் ஓரடிக்கண்ணும் பலவடிக் கண்ணும் நோக்குதல் கொள்க. அஃது ஒருநோக்காக ஓடுதலும் பல நோக்காக ஓடுதலும் இடையிட்டு நோக்குதலும் என மூன்றுவகைப்படும்.

"அறுசுவை உண்டி அமர்ந்தில்லாள் ஊட்ட
மறுசிகை நீக்கியுண் டாரும்-வறிஞராய்ச்
சென்றிரப்பர் ஓரிடத்துக் கூழெனிற் செல்வமொன்
றுண்டாக வைக்கற்பாற் றன்னு."

(நாலடி.1)

இஃது ஒருநோக்காக ஓடிற்று.

"அறிமின் அறநெறி அஞ்சுமின் கூற்றம்
பொறுமின் பிறர்கடுஞ்சொற் போற்றுமின் வஞ்சம்
வெறுமின் வினைதீயார் கேண்மை எஞ்ஞான்றும்
பெறுமின் பெரியார்வாய்ச் சொல்."

(நாலடி.172)

இது பல நோக்காகி வந்தது.

"உலக முவப்ப வலனேர்பு திரிதரு
பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்
கோவற இமைக்குஞ் சேண்விளங் கவிரொளி
உறுநர்த் தாங்கிய மதனுடை நோன்தாட்
செறுநர்த் தேய்த்த செல்லுறழ் தடக்கை
மறுவில் கற்பின் வாணுதல் கணவன்."

(முருகாற்.1-6)

என்றவழி 'ஒளி' என்பது அதனயற் கிடந்த தாளை நோக்காது கணவனை நோக்குதலின் இடையிட்டு நோக்கிற்று . பிறவுமன்ன.
(98)

1. இவ்வாறே பலவும் நோக்கி உணர்தற்குக் கருவியாகிய சொல்லும் பொருளும் எல்லாம் மாத்திரை முதலா அடிநிலைகாறும் என அடங்ககக்கூறி நோக்குதற் காரணம் நோக்கென்றான் என்பது. மாத்திரை முதலாயினவும் தத்தம் இலக்கணத்தில் திரியாது வந்தமையின் அவையும் இலக்கணம் அறிவார்க்கு நோக்கிப் பயன்கொள்ளுதற்கு உரியவாயினவாறு கண்டுகொள்க. 'எனப்படும்' என்றதனால் இவ்வாறு முழுவதும் நோக்குதற்குச் சிறப்புடைய எனவும் இவை இடையிட்டு வந்தன சிறப்பில் எனவும் கொள்ளப்படும். பிறவும் அன்ன. (தொல்,பொருள்,416.பேரா.)