என்-னின் நிறுத்தமுறையானே பாவாமாறு உணர்த்துவான் எடுத்துக் கொண்டார் அவை யினைத்தென வரையறுத்துணர்த்துதல் நுதலிற்று. ஆசிரியமெனவும் வஞ்சியெனவும் வெண்பா வெனவும் கலியெனவும் நான்கியல்பினையுடைத்து என்று சொல்வர் பாவினது வகையை விரிக்குங் காலத்து என்றவாறு. அஃதேல் ஒருசாராசிரியர் வெண்பா ஆசிரியங் கலி வஞ்சி என ஓதினார் யாதெனின். அவரும் ஒரு பயனோக்கி யோதினார் இவரும் ஒருபயன் நோக்கி ஓதினார் என்க. என்னை? வெண்பாவாவது பிறதளையோடு மயங்காமையானும் மிக்குங்குறைந்தும் வாராத அடியான் வருதலானும் அந்தணர் நீர்மைத்தென முற் கூறினார். அதன்பின் அந்நிகர்த்தாகிப் பிறதளையும் வந்து இனிய ஓசையையுடைத்தாய்ப் பரந்துவருதலின் அரசத் தன்மையது என்பதனான். ஆசிரியப்பாக் கூறினார். அதன்பின் அந்நிகர்த்தாகிச் சிறுபான்மை வேற்றுத்தளை விரவலின் வணிகர் நீர்மைத்தெனக் கலிப்பாக் கூறினார். அதன் பின் வஞ்சிப்பா அளவடியான் வருதலின்றிக் குறளடியுஞ் சிந்தடியுமாய் வந்து பல தளையும் விரவுதலின் வேளாண்மாந்த ரியல்பிற்றென வஞ்சிப்பாக் கூறினார். இவ்வாசிரியரும் பதினேழ் நிலத்தினும் வருதலானும் இனிய ஓசைத்தாகலானும் அடிப்பரப்பினானும் ஆசிரியப்பா முற்கூறினார். அதன்பின் ஆசிரிய நடைத்தாகி இறுதியாசிரியத்தான் இறுதலின் வஞ்சிப்பாக் கூறினார். இந்நிகர்த்தன்றி வேறுபட்ட ஓசைத்தாகலான் வெண்பா அதன்பின் கூறினார்; அதன்பின் வெண்சீர் பயின்று ஒருதலானும் வெண்பாவுறுப்பாகி வருதலானும் கலிப்பாக் கூறினாரெனவறிக. (99)
1. பாக்கூற்று விரி நான்கெனவே பாவினை உறுப்பாக உடைய செய்யுட்கு வரையறை கூறிற்றிலன் என்பது பெற்றாம். என்னை? அவற்றுப் போதுங்கால் அவற்றது பெயர்வேறுபாடும் அச்சூத்திரங்களான் அறிதும் என்பது; என்றார்க்கு இவை நான்கேயன்றிப் பாவாமாறு கூறானே எனின் இவையின்றித் தூக்குப் பிறவாமையின் இப்பாவிலக்கணமும் நோக்கோத்தினுட் கூறினானாகலான் ஆண்டோதியவாறே அமையும் கருத்து.(தொல்,பொருள்,147.பேரா.)
|