செய்யுளியல்

411அந்நிலை1 மருங்கின் அறமுத லாகிய
மும்முதற் பொருட்கும் உரிய வென்ப.
என்-னின்.மேற்கூறப்பட்ட பொருட்குரியவாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

அப் பாக்கள் நான்கும் பொதுப்பட நின்றவழி அறம் பொருளின்ப மென்னும் மூன்று முதற்பொருட்கும் உரிய என்றவாறு.

முதற்பொருள் என்றது பாகுபாடல்லாத பொதுமைகுறித்த பொருள். சில பொருள்களை எடுத்து விலக்குகின்றாராதலின், இவ்வாறு கூறப்பட்டது.அப்பொருட்கண் உரியவாகியவாறு சான்றோர் செய்யுளகத்துக் கண்டுகொள்க.

(100)

1. அந்நிலை மருங்கின் எனவே , அவை மும்முதற் பொருட்கு உரியவாங்கல் செய்யுளிடத்தன்றித் தாமாக உரிமை பூணா என்பது. வீடென்பது செய்யுளுள் வாராதோ எனின், அறமுதல் என்பது புறப்பாட்டெல்லையாகக் கூறினான் என்பார் நான்கு பொருளும் தழீஇ உரைப்ப.(தொல்,பொருள்,418.பேரா.)