செய்யுளியல்

416வாயுறை1 வாழ்த்தே அவையடக் கியலே
செவியறி வுறூஉஎன அவையும் அன்ன
என்-னின், ஒருசார் பொருட்குரிய மரபுணர்த்துதல் நுதலிற்று.

வாயுறைவாழ்த்தும் அவையடக்கியலும் செவியறிவுறுத்தற்பொருளுங் கலியிலும் வஞ்சியினும் வரப்பெறா என்றவாறு.

எனவே, முன்னையவொப்ப ஏனையிரண்டினும் வரப்பெறும் என்றவாறாம்.

(105)

1. வாய் - வாய்மொழி , உறை - மருந்து; வாயுறை என்பது சொல் மருந்தெனப் பண்புத்தொகையாம். இனி வாய்க்கண் தோன்றிய மருந்தென வேற்றுமைத் தொகையுமாம். மருந்து போறலின் மருந்தாயிற்று. அவன் சிறப்புக் கூறிவழுத்தி ஒரு சாத்தற்குப் பயன்படச் சொல்லினமையின் வாயுறை வாழ்த்தெனப்படும் என்பது.(தொல். பொருள். 423.பேரா.)