செய்யுளியல்

417வாயுறை வாழ்த்தே வயங்க நாடின்
வேம்புங் கடுவும் போல வெஞ்சொல்
தாங்குதல் இன்றி வழிநனி பயக்குமென்று
ஓம்படைக் கிளவியின் வாயுறுத் தற்றே.
என்-னின் வாயுறைவாழ்த்து ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

வாயுறை வாழ்த்தை விளங்க ஆராயின் வேம்பினையுங் கடுவினையும் போல வெஞ்சொ லடக்காது பிற்பயக்குமெனக் கருதிப் பாதுகாவற் கிளவியானே. மெய்யறிவித்தல் என்றவாறு.


உதாரணம்

"இருங்கடல்1 உடுத்த இப் பெருங்கண் மாநிலம்
உடையிலை நடுவண திடைபிறர்க் கின்றித்
தாமே ஆண்ட ஏமங் காவலர்
இடுதிரை மணலினும் பலரே சுடுபிணக்
காடுபதி யாகப் போகித் தத்தம்
நாடு பிறர்கொளச் சென்றுமாய்ந்தனரே
அதனால், நீயுங் கேண்மதி யத்தை வீயா
துடம்பொடு நின்ற உயிரும் இல்லை
மடங்க லுண்மை மாயமோ அன்றே
கள்ளி வேய்ந்த முள்ளியம் புறங்காட்டு
வெள்ளில் போகிய வியலுள் ஆங்கண்
உப்பிலாஅ அவிப்புழுக்கல்
கைக்கொண்டு பிறக்குநோக்கா
திழிபிறப்பினோன் ஈயப்பெற்று
நிலங்கல னாக விலங்குபலி மிசையும்
இன்னா வைகல் வாரா முன்னே
செய்ந்நீ முன்னிய வினையே
முந்நீர் வரைப்பக முழுதுடன் துறந்தே."

(புறம்.363)

என்னும் பாட்டு.
(106)

1. (பாடம்) இருங்கடல் தானையொடு பெருநிலம் கவைஇ.