செய்யுளியல்

420ஒத்தா ழிசையும் மண்டில யாப்புங்
குட்டமும் நேரடிக் கொட்டின வென்ப.
என்-னின் , சில செய்யுட்களில் அடிவரையறுத்தலை நுதலிற்று.

ஒத்தாழிசைக் கலிக்கு உறுப்பாகிய ஒத்தாழிசையும், ஆசிரியப்பாவின் கண் நிலைமண்டிலம் அடிமறி மண்டலம் என்பனவும், ஒத்தாழிசைக்கும் கொச்சகத்திற்கும் பொதுவாகிய குட்டமும் நாற்சீரடிக்குப் பொருந்தின என்றவாறு.

மேல் ஆசிரியப்பாவின் ஈற்றயலினும் ,இடையினும், முச்சீரும் இருசீரும் ஐஞ்சீரும் அறுசீரும் வரும் என்றதனானே, எல்லாவடியும் ஒத்து வருவனவு முளவென மண்டிலம் கூறவேண்டிற்று.

கலிப்பாவிற்குச் சுரிதகம் ஈற்றடி முச்சீரானும் ஈற்றயலடி முச்சீரானும் வரும் என்றமையால், தாழிசையுந் தரவும் நாற்சீரானல்லது பிறவாற்றான் வாராவெனக் கூறல் வேண்டிற்று குட்டமெனினும் தரவெனினும் ஒக்கும்.

இனிக்கலிக்குறுப்பாகிய சின்னங்கள் இருசீரானும் முச்சீரானும் வருதலானும் தனிச்சொல் ஒருசீரானும் வருதலானும் வேறு ஓதவேண்டிற்று.

உதாரணம் முன்னர்க்காட்டுதும்.

(109)