செய்யுளியல்

421குட்டம் எருத்தடி உடைத்தும் ஆகும்.
என்-னின், மேலதற்கோர் புறனடை உணர்த்துதல் நுதலிற்று.

தரவு ஈற்றயலடி முச்சீரான் வரவும்பெறும் என்றவாறு.

எருத்தடி யுடைத்தென்றதனானே ஈற்றயலடி முச்சீர் எனப் பொருள் படுமோ எனின். ஆசிரியப்பாவின் ஈற்றயலடி முச்சீரான்வருதல் பெரு வழக்காதலானும் இனிவருகின்ற சூத்திரம் தூக்கியலென ஒதுகையானும் இவ்வாறு பொருள்படுமென்று கொள்க. உதாரணம் முன்னர்க்காட்டுதும்.

இன்னும் குட்டம் என்பதனைத் தரவு கொச்சகமாகிய கொச்சக வொருபோகிற்குப் பெயராக வழங்கினும் அமையும். அவ்வழி ஒத்தாழிசை என்பதனை ஒத்தாழிசையெனத் தரவெனத் தரவையுங் கூட்டிப் பொருளுரைக்கப்படும்.

(110)