செய்யுளியல்

422மண்டிலங் குட்டம் என்றிவை இரண்டும்
செந்தூக் கியல என்மனார் புலவர்.
என்-னின், மேற் சொல்லப்பட்டவற்றுள் மண்டிலம் குட்டம் என்பனவற்றிற்குரியதோர் ஓசை வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று.

மண்டிலமாகக் கூறப்படும் பாவும் குட்டமெனக் கூறப்படும் பாவும் அகவலோசை இயல என்றவாறு.

உதாரணம் முன்னர்க் காட்டுதும்.

இனி நான்குபாவினும் வெண்பாவுங் கலிப்பாவும் முன்னெடுத்தோதுகின்றாரா தலானும் ஆசிரியப்பாவும் வஞ்சிப்பாவும் இத்துணையும் ஓதிய இலக்கணத்தான் முடித்தலானும், அவையிற்றிற்கு உதாரணம் ஈண்டேகாட்டுதும். ஆசிரியப்பாவாவது பெரும்பான்மை இயற்சீரானும் ஆசிரிய வுரிச்சீரானும் ஆசிரியத்தளையானும் அகவலோசையானும் நாற்சீரடியானும் சிறுபான்மை ஒழிந்த சீரானும் தளையானும் அடியானும் வருவது. அவ்வாறாதல் மேற்கூறப்பட்ட சூத்திரங்களான் உணர்க.

இப்பாவிற்கு ஈற்றெழுத்து வரையறுத்துணர்த்தாமையின் எல்லா வீறுமாம். எற்றுக்கு?

"அகவல் இசையன அகவல் மற்றவை
ஏஓ,ஈஆ,என் ஐ என் றிறுமே."

(யாப்.வி.ப.69)

என்று வரைந்தோதினார் உளரால் எனின்.

"கோள்மா கொட்குமென் றஞ்சுவல் ஒன்னார்க்
கிருவிசும்பு கொடுக்கும் நெடுவேல் வழுதி
கூடல் அன்ன குறுந்தொடி அரிவை
ஆடமை மென்றோள் நசைஇ நாடொறும்
வடியமை1 எஃகம் வலவயின் ஏந்திக்
கைபோற் காந்தட் கடிமலர் கமழும்
மைதோய் வெற்பன் வைகிருள்2 வருமிடம்."

(யாப்.வி.ப.262)

எனப் பிறவாற்றானும் வருதலின் ஈறு வரையறுக்கப்படா தென்றுகொள்க.

இனி இவ்வாசிரியப் பாவினை அடிநிலையாற் பெயரிட்டு வழக்கப்படும். அஃதாமாறு:-

ஈற்றயலடி முச்சீரான் வருவதனை நேரிசையாசிரியம் என்ப.

உதாரணம்

"முதுக்குறைந் தனளே முதுக்குறைந்தனளே
மலையன் ஒள்வேற் கண்ணி
முலையும் வாரா முதுக்குறைந் தனளே."

(யாப்.வி.ப.122)

எனவரும்.

இடையிடை முச்சீர் வரின் இணைக்குற ளாசிரியம் என்ப.


உதாரணம்

"நீரின் தண்மையுந் தீயின் வெம்மையுஞ்
சாரச் சார்ந்து தீரத் தீரும்
சாரல் நாடன் கேண்மை
சாரச் சாரச் சார்ந்து
தீரத் தீரத் தீர்பொல் லாவே."

(யாப்.வி.ப.257)

எனவரும்.

எல்லா அடியும் ஒத்துவருவதனை நிலைமண்டில ஆசிரியம் என்ப இதற்கு இலக்கணம் முன்னர்க் காட்டுதும்.

"வேரல் வேலி வேர்க்கோட் பலவின்
சாரல் நாட செவ்வியை யாகுமதி
யாரஃதறிந்திசி னோரே சாரற்
சிறுகோட்டுப் பெரும்பழந் தூங்கி யாங்கிவள்
உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே."

(குறுந்.18)

எனவரும்.

இனி எல்லா அடியும் ஒத்துவரும் பாட்டினையே அடிமறிமண்டில ஆசிரியம் என்று வழங்குப. இதற்கிலக்கணஞ் சொல்லதிகாரத்துள் நிரனிறைசுண்ணம் (எச்சவியல்.8) என்னும் சூத்திரத்தாற் கொள்க.

"சூரல் பம்பிய சிறுகான் யாறே
சூரா மகளிர் ஆரணங் கினரே
வாரல் எனினே யானஞ் சுவலே
சாரல் நாட நீவர லாறே."

(யாப்.வி.ப.259)

எனவரும்.

இதனுள் யாதானும் ஓரடியை முதலுமுடிவுமாக உச்சரித்தாலும் ஓசையும் பொருளும் வழுவாது வருதலின் அடிமறியாயிற்று.

இனி முச்சீரடி முதலாக அறுசீரடி யீறாக மயங்கிய ஆசிரியத்தினை அடிமயங்காசிரிய மெனவும் வெண்பாவடி மயங்கிய ஆசிரியத்தினை வெள்ளடிமயங்காசிரிய மெனவும் , வஞ்சியடி மயங்கிய ஆசிரியத்தினை வஞ்சி அடிமயங்காசிரிய மெனவும் வழங்கப்படும் .இதற்கு இலக்கணம்:-

"வெண்டளை விரவியும் ஆசிரியம் விரவியும்
ஐஞ்சீரடியும் உளவென மொழிப."

(தொல்,செய்.60)

"அறுசீரடியே ஆசிரிய தளையொடு
நெறிபெற்று வருஉ நேரடி முன்னே."

(தொல்,செய்.61)

"இயற்சீர் வெள்ளடி ஆசிரிய மருங்கின்
நிலைக்குரி மரபின் நிற்கவும் பெறுமே."

(தொல்,செய்.59)

எனவும்,

"ஆசிரிய நடைத்தே வஞ்சி."

(தொல்,செய்.104)

என ஒற்றுமைப் படுத்துதலானுங் கொள்க.
உதாரணம்

"சிறியகட் பெறினே யெமக்....தவப்பலவே."

(புறம்.235)

இப்பதினேழடியாசிரியத்துள் ஏழாமடியும் பன்னிரண்டாமடியும் முச்சீரான் வந்தன. மூன்றாமடி முதலாக ஆறாமடியீறாக நான்கடியும் பதினாலாமடியும் ஐஞ்சீராண் வந்தன. இரண்டாமடியும் பதினொன்றாமடியும் அறுசீரான் வந்தன. ஏனைய நாற்சீரான் வந்தன. இவ்வாறு வருதலின் அடிமயங்காசிரியம் ஆயிற்று.

"எறும்பி அளையிற் குறும்பல் சுனைய
உலைக்கல் லன்ன பாறை யேறிக்
கொடுவில் லெயினர் பகழி மாய்க்குங்
கவலைத் தென்ப அவர் தேர்சென்ற வாறே
அதுமற் றவலங் கொள்ளாது
நொதுமலர்க்3 கலிழுமிவ் அழுங்க லூரே."

(குளுந்.12)

இதனுள் முதலடி இயற்சீர் வெள்ளடியாதலின் வெள்ளடி விரவிய ஆசிரிய மெனப்படும்.

"இருங்கட லுடுத்தவிப் பெருங்கண் மாநிலம்
உடையிலை நடுவண திடைபிறர்க் கின்றித்
தாமே யாண்ட ஏமங் காவலர்
இடுதிரை மணலினும் பலரே சுடுபிணக்
காடுபதி யாகப் போகித் தத்தம்
நாடு பிறர்கொளச் சென்றுமாய்ந்தனரே
அதனால்,நீயுங் கேண்மதி யத்தை வீயா
துடம்பொடு நின்ற உயிரும் இல்லை
மடங்க லுண்மை மாயமோ அன்றே
கள்ளி ஏய்ந்த முள்ளியம் புறங்காட்டு
வெள்ளில் போகிய வியலுள் ஆங்கண்
உப்பிலாஅ அவிப்புழுக்கல்
கைக்கொண்டு பிறக்குநோக்கா
திழிபிறப்பினோன் ஈயப்பெற்று
நிலங்கல னாக விலங்குபலி மிசையும்
இன்னா வைகல் வாரா முன்னே
செய்ந்நீ முன்னிய வினையே
முந்நீர் வரைப்பக முழுதுடன் துறந்தே."

(புறம்.363)

இதனுள்,

"உப்பிலாஅ அவிப்புழுக்கல்."


என்பது முதலாக மூன்றடியும் வஞ்சியடி.

இனி வஞ்சிப்பா ஆவது வஞ்சியுரிச்சீரானும் ஏனைச்சீரானும் இரு சீரடியானும் முச்சீரடியானுந் தூங்கலோசையானும் வந்து தனிச்சொற் பெற்று ஆசிரியச் சுரிதகத்தான் இறுவது. இதற்கு இலக்கணம்:

"வஞ்சிச் சீரென வகைபெற் றனவே
வெண்சீ ரல்லா மூவசை யென்ப."

(தொல்,செய்.19)

"தன்பா வல்வழித் தானடை வின்றே."

(தொல்,செய்.20)

"வஞ்சி மருங்கின் எஞ்சிய வுரிய."

(தொல்,செய்.21)

"வஞ்சி யடியே இருசீர்த் தாகும்."

(தொல்,செய்.43)

"முச்சீரானும் வருமிடன் உடைத்தே."

(தொல்,செய்.45)

"வஞ்சித் தூக்கே செந்தூக் கியற்றே."

(தொல்,செய்.68)

என்பனவற்றாற் கொள்க. இப்பா இருசீரடி வஞ்சிப்பா, முச்சீரடி வஞ்சிப்பா என இருவகைப்படும்.

"பூந்தாமரை போதலமரத்
தேம்புனலிடை மீன்திரிதரும்
வளவயலிடைக் களவயின்மகிழ்
வினைக்கம்பலை மனைச்சிலம்பவும்
மனைச்சிலம்பிய மணமுரசமும்4
வயற்கம்பலைக் கயலார்ப்பவும் , நாளும்
மகிழின்5 மகிழ்தூங் கூரன்
புகழ்தல் ஆனாப் பெருவண் மையனே."

(யாப்.வி.பக்.336)

இது குறளடியான் வந்து தனிச்சொற்பெற்று ஈற்றயலடி முச்சீரான் வந்தது ஆசிரியச் சுரிதகத்தாலிற்ற இருசீரடி வஞ்சிப்பா தனிச்சொற் பெறுதல் எடுத்தோதிற்றிலராயினும் 'உரையிற் கோடல்' என்பதனாற் கொள்க.

"கொடிவாலன கருநிறத்தன குறுந்தாளன
வடிவாளெயிற் றழயலுளையன வள்ளுகிரன
பணையெருத்தின் இணையரிமான் அணையேறித்
துணையில்லாத் துறவுநெறிக் கிறைவனாகி
எயில்நடுவ ணினிதிருந் தெல்லோர்க்கும்
பயில்படுவினை பத்தியலாற் செப்பியோன் , புணையெனத்
திருவுறு திருந்தடி திசைதொழ
வெருவுறு நாற்கதி வீடுநனி எளிதே."

(யாப்.வி.பக்.337)

இது முச்சீரடி வஞ்சிப்பா.


இனி,

"வஞ்சி மருங்கின் எஞ்சிய உரிய."

(தொல்,செய்.21)

என்றோதியவதனால் ஆசிரியவடியோடும் வெண்பாவடியோடுங் கலியடியோடும் மயங்கி வருவன கொள்க.

பட்டினப் பாலையுள்,

"நேரிழை மகளிர் உணங்குணாக்கவரும்."

(22)

என்பது ஆசிரியவடி.

"கோழி எறிந்த கொடுங்காற் கணங்குழை."

(23)

என்பது வெண்பாவடி.

"வயலாமைப் புழுக்குண்டு வறளடும்பின் மலர்மலைந்து."

(645)

என்பது கலியடி.

இனி வெண்பா வாமாறும் கலிப்பா வாமாறும் முன்னர்க்காட்டுதும்.

(113)

1. (பாடம்)நுனைஎஃகம்.

2. அவிழும்மை தோய்சிலம்பன் நள்ளிருள்.

3. நொதுமற்.

4. (பாடம்)மணமுரசொலி.

5. மகிழு.