என்-னின் வெண்பாவாமாறு உணர்த்துதல் நுதலிற்று. நெடுவெண்பாட்டு முதலாக அங்கதச்செய்யுள் ஈறாகச் சொல்லப்பட்டவையும். அளவொத்தவையும் எல்லாம் வெண்பாயாப்பினை யுடைய என்றவாறு. வெண்பாயாப்பாவது, வெண்சீரானும் இயற்சீரனனும் வெண்டளையானும் செப்பலோசையானும் அளவடியானும் முச்சீரீற்றடியானும் வருவது. இவற்றிற்கு இலக்கணம் மேலோதப்பட்டது. ஈண்டு ஓதப்பட்டன வெல்லாம் இவ்வாறுவரும் என்றவறு. இவையெல்லாம் ஓசையான் ஒக்குமாயினும்அளவானுந் தொடையானும் பொருளானும் இனத்தானும் வேறுபடுத்திக் குறியிடுகின்றார் என்றுகொள்க. நெடுவெண்பாட்டாவது அளவடியி2 னெடிய பாட்டு. குறுவெண்பாட்டாவது அளவடியிற்3 குறிய பாட்டு. கைக்கிளையென்பதூஉம் அங்கதமென்பதூஉம் பொருளானாகிய பெயர். பரிபாட்டாவதுபரிந்த4 பாட்டாம். அஃதாவது ஒருவெண்பாவாக வருதலின்றிப் பலவுறுப்புக்களோடு5 தொடர்ந்து ஒருபாட்டாகி முற்றுப்பெறுவது. 'ஒத்தவை' என்பது அளவானும் பொருளானும் இனத்தானும் வேறுபடுக்கப்படாத சமநிலை வெண்பாக்களாம். அவையாவன நான்கடியான் வருவன. இவ்வாசிரியர் நான்கினை அளவென்றும் ஏறினவற்றை நெடிலென்றும் குறைந்தவற்றைக் குறள் சிந்து என்றும் வழங்குவராகலின், இவற்றுள்6 பொருளானும் இனத்தானும் வேறுபடுக்கப்படாத நெடுவெண்பாட்டும் குறுவெண்பாட்டும் சமநிலை வெண்பாட்டும் என மூவகையானும் வரும். குறுவெண்பாட்டாவது இரண்டடியானும் மூன்றடியானும் வரும். உதாரணம் "அறத்தா றிதுவென வேண்டாசிவிகை பொறுத்தானோ டூர்ந்தான் இடை, " (குறள். 37) இஃதுஇரண்டடியும் ஒரு தொடையான் வருதலின் குறள்வெண்பா என்ப. "உருவுகண் டெள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க் கச்சாணி அன்னார் உடைத்து. " (குறள். 667) இதுவிகற்பத்தொடையான் வருதலின் விகற்பக்குறள் வெண்பா என்ப. மூன்றடியான் வருவதனைச் சிந்தியல் வெண்பா எனவழங்கப்படும். உதாரணம் "நறுநீல நெய்தலும் கொட்டியுந் தீண்டப் பிறர்நாட்டுப் பெண்டிர் முடிநாறும் பாரி பறநாட்டுப் பெண்டிர் அடி." (யாப். வி.ப. 226) இஃதுஒத்து ஒருதொடையான் வருதலின், இன்னிசைச்சிந்தியல் வெண்பாவாம்."நற்கொற்ற வாயில் நறுங்குவளைத் தார்கொண்டு சுற்றும்வண்டார்ப்பப் புடைத்தாளே பொற்றேரான் பாலைநல் வாயில் மகள். " (யாப். வி.ப. 226) எனவும், "சுரையாழ அம்மி மிதப்ப வரையனைய. யானைக்கு நீத்துமுயற்கு நிலையென்ப கானக நாடன் சுனை. " (யாப். வி.ப. 229) எனவும் இவை வேறுபட்ட தொடையான் வருதலின் நேரிசைச் சிந்தியல் வெண்பாவாம். இனி நான்கடியான் வருவன சமநிலை வெண்பா வெனப்படும். அவற்றுள் இரண்டாமடியின் இறுதிக்கண் ஒரூஉத்தொடை பெற்று வருவனவற்றை நேரிசை வெண்பா எனவும், ஒருஉத்தொடை பெறாது வருவனவற்றை இன்னிசை வென்பா எனவும் வழங்கப்படும். ஒரூஉத்தொடை வருக்கவெதுகை யாகியும் வரும். இவையெல்லாம் 'உரையிற் கோடல் ' என்பதனாற் கொள்க. "அறுசுவை உண்டி அமர்ந்தில்லாள் ஊட்ட மறுசிகை நீக்கியுண் டாரும் - வறிஞராய்ச் சென்றிரப்பர் ஓரிடத்துக் கூழெனிற் செல்வமொன் றுண்டாக வைக்கற்பாற் றன்று." (நாலடி. 1) இது நேரிசை வெண்பா."கல்வரை ஏறிக் கடுவன் கனிவாழை எல்லுறு போழ்தின் இனிய7 பழங்கைக்கொண் டொல்லொலை8 யோடு மலைநாடன் தன்கேண்மை சொல்லச் சொரியும் வளை. " (கைந்நிலை. 7) இஃது இன்னிசை வெண்பா."வளம்பட வேண்டாதார் யார்யாரும் இல்லை அளந்தன போகம் அவரவர் ஆற்றான் விளங்காய் திரட்டினார் இல்லை - களங்கனியைக் காரெனச் செய்தாரும் இல். " (நாலடி. 103) நான்கடியாயும் மூன்றாமடிக்கண் தனிச்சொற் பெற்று வருதலின் நேரிசைப்பாற் படும். பிறவுமன்ன. ஐந்தடி முதற் பன்னிரண்டடிகாறும் வருவன பஃறொடை வெண்பா எனப்படும். இதனுள்ளும் ஒரூஉத்தொடை பெற்று வருவனவற்றை நேரிசைப் பஃறொடை எனவும். ஒரூஉத்தொடையின்றி வருவனவற்றை இன்னிசைப் பஃறொடை எனவும் வழங்கப்படும். "சேற்றுக்கால் நீலம் செருவென்ற வேந்தன்வேற் கூற்றுறழ் மொய்ம்பிற் பகழி பொருகயல் தோற்றந் தொழில்வடிவு தம்முள் தடுமாற்றம் வேற்றுமை இன்றியே யொத்தன மாவேடர் ஆற்றுக்கா லாட்டியர் கண். " (யாப். வி. பக். 236) இஃது இன்னிசைப் பஃறொடை. "பன்மாடக்கூடல் மதுரை நெடுந்தெருவில் என்னோடு நின்றார் இருவர் அவருள்ளும் பொன்னோடை நன்றென்றாள் நல்லளே பொன்னோடைக் கியானைநன் றென்றாளும் அந்நிலையள் யானை யெருத்தத் திருந்த இலங்கிலைவேல் தென்னன் திருத்தார்நன் றென்றேன் தியேன். " (யாப். வி.பக். 237) இஃது ஆறடியான் வந்து ஒரூஉத்தொடை பெறுதலின் நேரிசைப் பஃறொடை வெண்பா. "சிற்றாறு பாய்ந்துகளுஞ்9 சேயரிக் கண்ணினாய் வற்றா வளவயலும் வாய்மாண்ட ஏரியும் பற்றார்ப் பிணிக்கு மதிலும் படுகிடங்கும் ஒப்ப வுடைத்தா ஒலியோவா நீர்ப்புட்கள் தத்தி இரைதேருந் தையலாய் நின்னூர்ப்பேர் ஒத்துணரும் வண்ண முரைத்தி யெனக்கூறக் கட்டலர் தாமரையுள் ஏழுங் கலிமான்றேர்க்10 கத்திருவர் ஐவருங் காயா மரமொன்றும் பெற்றவழி தேர்ந்துண்ணும் பேயின் இருந்தலையும் வித்தாகா நெல்லின் இறுதியும் பெற்றக்கால்11 ஒத்தியைந்த தெம்மூர்ப்பேர் போலென்றாள் வானவன்கை விற்பொலிந்த வெம்புருவகத் தாள். " (யாப். வி.பக். 237) இது பன்னிரண்டடியான் (பெருவல்லத்தைக்கூற) வந்த இன்னிசைப்பஃறொடை வெண்பா. ஏனையவும் வந்தவழிக் கண்டுகொள்க. இவற்றுள், "ஒருபொருள் நுதலிய வெள்ளடி இயலால் திரிபின்றி நடப்பது12 கலிவெண்பாட்டே. " (தொல். செய். 147) என ஓதினமையாற் புணர்தல் முதலாகிய பொருள்களுள் யாதானும் ஒருபொருளைக் குறித்துத் திரிபின்றி முடியும் பஃறொடை வெண்பா வினைக் கலிவெண்பா எனவும், குறள்வெண்பா முதலாகிய எல்லா வெண்பாக்களுங் கொச்சகக்கலிக்கு உறுப்பாய் வரிற் கொச்சகம் எனவும், பரிபாடற்கு உறுப்பாய்வரிற் பரிபாட லெனவுங் கொள்ளப்படும்.கைக்கிளை என்பது கைக்கிளைப் பொருண்மை. மேற்சொல்லப்பட்ட வெண்பாக்கள் இப்பொருள்மேல் வரிற் கைக்கிளைவெண்பா எனப்படும். "பொன்னார மார்பிற் புனைகழற்காற் கிள்ளிபேர் உன்னேனென் றூழுலக்கை பற்றினேற்- கன்னோ மனனோடு வாயெல்லாம் மல்குநீர்க் கோழிப் புனல்நாடன் பேரேவரும்." (யாப்.வி.பக்.62) கைக்கிளை வெண்பாயாப்பினால் வரும் எனவே, ஆசிரியப் பாவினால் வரப்பெறா தென்பதும், வந்ததேயாயினும் பாடாண்பாட்டுக் கைக்கிளையாகு மெனவும் கொள்ளப்படும்.பரிபாட்டும் அங்கதமும் தத்தஞ் சிறப்புச் சூத்திரத்துட் சொல்லுதும். (112)
1. நெடுவெண்பாட்டென்ப தாமுடைய பன்னீரடி உயர்வு இழிபு ஏழடியாக வருவன என்பது; எனவே, நாற்சீர் அளவடி ஆயினாற்போல நாலடியான் வருதலே அளவிற்பட்டதாகலான் ஐந்தடிமுதலாக வருவன எல்லாம் நெடுவெண்பாட்டென்றலே வலியுடையது. குறுவெண்பாட்டென்பை இரண்டியானும் மூன்றடியானும் வருவன.(தொல்,பொருள்,430.பேரா.) 2. (பாடம்)அளவி. 3. அளவிற். 4. பரிந்தபாட்டுப் பரிபாட்டென வரும். 5. பல வெண்பாவாகிப் பலவுறுப்புக்களோடு.6. வேற்றுப். 7. (பாடம்)இனிய பழங்கொண்டே. 8. யெல்லையே; டொல்லென. 9. பாய்ந்தாடும் சேயரியுண்கணாய் ; பாய்ந்தொழுகும். 10. கடுமான்தேர்க் 11. பெற்றவிழ் தேர்ந்துண்ணாத பேயே இருதலையும் வித்தாதநெல்லின் இறுதியும் கூட்டியக்கால். 12. வருவது.
|