என் - னின். எய்தியதன்மேற் சிறப்புவிதி உணர்த்துதல் நுதலிற்று. கைக்கிளைப் பொருண்மை வெண்பாவினால் வருதலின்றி முதலிரண்டடியும் வெண்பாவாகிக் கடையிரண்டடியும் ஆசிரியமாகி இருபாவினாலும் வரும் என்றவாறு. இவ்வாறு வருவதனை மருட்பா என்ப. இக்கருத்தினானே மேல். "மருட்பா ஏனை இருசார் அல்லது தானிது என்னுந் தன்மை இன்றே. " (தொல். செய். 81) என ஓதினார் என்றுகொள்க. அது. "உரவொலி முந்நீர் உலாய்நிமிர்ந் தன்ன கரவரு காமங் கனல1 இரவெதிர முள்ளெயி றிலங்கு முகிணகை வெள்வளை நல்காள் வீடுமென் உயிரே." (பு. வெ. கைக்கிளை.-9) எனவரும்.(113)
1. (பாடம்) கனற்ற.
|