என்-னின். இதுவுமது. மேற்சொல்லப்பட்ட பரிபாடற் பாட்டுப் பொதுவாய் நிற்றலேயன்றிக் கொச்சகமும் அராகமும் சுரிதகமும் எருத்தும் என்று சொல்லப்பட்ட நான்குந் தனக்குறுப்பாகக் காமங் கண்ணிய நிலைமையை உடைத்து என்றவாறு. எனவே, அறத்தினும் பொருளினும் வாராதாம். "வாழ்த்தியல் வகையே நாற்பாக்கும் உரித்தே." (தொல்.செய்.105) எனச் சிறப்புவிதி யோதினமையால் நான்கு பாவினும் பரிபாடல் வெண்பாயாப்பிற்றாதலிற்கடவுள் வாழ்த்தாகியும் வரப்பெறும். கொச்சகமென்பது ஐஞ்சீரடுக்கி வருவனவும் ஆசிரியவடி. வெண்பாவடி, வஞ்சியடி, கலியடி, சொற்சீரடி, முடுகியலடி என்று சொல்லப்பட்ட அறுவகை யடியானும் அமைந்த பாக்களை உறுப்பாக வுடைத்தாகி வியலாற் வெண்பா வியலாற் புலப்படத் தோன்றுவது. இதனுட்,"சொற்சீரடியும் முடுகியல் அடியும் அப்பா நிலைமைக் குரிய வாகும்." (செய்யுளியல்.118) என வேறு ஓதுதலின், ஏனைநான்குங் கொச்சகப் பொருளாகக் கொள்ளப்படும்."தரவும் போக்கும் இடையிடை2 மிடைந்தும் ஐஞ்சீ ரடுக்கியும் ஆறுமெய் பெற்றும் வெண்பா இயலான் வெளிப்படத் தோன்றும் பாநிலை வகையே கொச்சகக் கலியென நூல்நவில் புலவர் நுவன்றறைந்தனரே." (செய்யுளியல்.148) என்றாராகலின். இவ்விலக்கணத்தானே பரிபாடலுட் கொச்சகம் வரும்வழித் தரவுஞ் சுரிதகமும் இடையிடை வருதலுங்கொள்க .'வெண்பா வியலான் ' என்றதனால் தன்தளையானும் பிறதளையானும் வந்து ஈற்றடி முச்சீரான் வருவனவெல்லாங் கொள்க. அராகமென்பது ஈரடியானும் பலவடியானுங் குற்றெழுத்து நெருங்கி வரத் தொடுப்பது . பெருமைக்கெல்லை ஆறடி. என்னை? "அராகந் தாமே நான்காய் ஒரோவொன்று வீதலும் உடைய மூவிரண் டடியே."
"ஈரடி யாகு மிழிபிற் கெல்லை." என அகத்தியனார் ஓதுதலின். சுரிதகம் என்பது ஆசிரிய இயலானாதல் வெண்பா இயலானாதல் பாட்டிற் கருதிய பொருளை முடித்துநிற்பது. எருத்தென்பது இரண்டி யிழிபாகப் பத்தடிப் பெருமையாக வருவதோ ருறுப்பு. பாட்டிற்று முகம் தரவாதலானுங் கால் சுரிதகமாதலானும் இடைநிலைப் பாட்டாகிய தாழிசையுங் கொச்சகமு மராகமுங் கொள்ளக் கிடத்தலின் எருத்தென்பது கழுத்தின் புறத்திற்குப் பெயராக வேண்டுமாதலான் அவ்வுறுப்புத் தரவைச் சார்ந்து கிடத்தல் வேண்டுமென்று கொள்க. "தரவே எருத்த மராகங் கொச்சகம் அடக்கியல் வகையோ டைந்துறுப் புடைத்தே." என்பது அகத்தியமாதலின் தரவென்பதோருறுப்புங் கோடல் வேண்டுமெனின். இவ்வாசிரியர் 'கொச்சகம்' என ஓதியவதனானே தரவும் அவ்விலக்கணத்திற் படுமென்பது ஒன்று. எருத்து என்பது இவ்வாசிரியர் கருத்தினால் தரவென்பது போலும்.பரிபாடற்கண் மலையும் யாறும் ஊரும் வருணிக்கப்படும். "அதுதான் , மலையே யாறே யூரென் றிவற்றின் நிலைபெறு மரபி னீங்கா தாகும்." என்றாராகலின், இனிச் சுரிதகமின்றியும் பரிபாடல் முற்றுப்பெறும். "கொச்சக வகையின் எண்ணொடு விராஅய் அடக்கிய லின்றி அடங்கவும் பெறுமே." என அகத்தியனார் ஓதுதலின்.(115)
1. 'செப்பிய நான்கு' என்றது எண்ணப்பட்ட நான்கனையும் அன்று அன்னவற்றோடு மேற்கூறிய நான்கு பாவும் இடை வந்து விரவும் என்பது. அதுவும் நோக்கிப் போலும் பரிபாடல் என்றது. (தொல். பொருள். 433. பேரா.) 2. (பாடம்)பாட்டிடை.
|