செய்யுளியல்

428கட்டுரை வகையான் எண்ணொடு புணர்ந்து
முற்றடி யின்றிக் குறைவுசீர்த் தாகியும்
ஒழியசை யாகியும் வழியசை புணர்ந்துஞ்.
சொற்சீர்த் திறுதல் சொற்சீர்க் கியல்பே.

என் - னின். சொற்சீராமாறுஉணர்த்துதல் நுதலிற்று.

கட்டுரையாவது பாட்டின்றித் தொடுக்கப்பட்டு வருவது.

எண்ணென்பது ஈரடியாற் பலவாகியும் ஓரடியாற் பலவாகியும் வருதல். பலவருதலின் எண்ணென்றார்.

'முற்றடி யின்றிக் குறைவுசீர்த் தாகியும் ' என்பது நாற்சீரடியின்றி முச்சீரடியானும் இருசீரடியானும் வருதல்.

'ஒழியசையாகியும்' என்றது ஒழிந்த அசையினை யுடைத்தாகியும் என்றவாறு.

எனவே இறுதிச்சீர் ஒன்றும் இரண்டும் அசை குறையப்பெறும் என்றவாறாம்.

வழியசை புணர்த்தலாவது ஒரு சீரின்கண்ணே பிறிதொருசீர் வரத் தொடாது ஓரசைவரத் தொடுப்பது.

சொற்சீர்த்திறுதல் என்பது சொற்றானே சீராந்தன்மையைப் பெற்று நிற்றல்.

சொற்சீர்க்கியல்பே என்றது இப்பெற்றியை யுடைத்துச் சொற் சீரின தியல்பு என்றவாறு.

இவ்விலக்கணம் பரிபாடற் செய்யுட்கண் வருமாறு:-

"ஆயிரம் விரித்த அணங்குடை அருந்தலைத்
தீயுமிழ் திறலொடு முடிமிசை அணவர
மாயுடை மலர்மார்பின் மையில்வால் வளைமேனிச்
சேயுயர் பனைமிசை எழில்மேழி1 ஏந்திய
வாய்வாங்கும் வளைநாஞ்சில் ஒருகுழை ஒருவனை;

இதுதரவு.

எரிமலர் சினைஇய கண்ணை பூவை
விரிமலர் புரையு மேனியை மேனித்
திருஞெமர்ந் தமர்ந்த மார்பினை மார்பில்
தெரிமணி விளங்கும்2 பூணினை மால்வரை
எரிதிரிந் தன்ன பொன்புனை உடுக்கையை
சேவலங் கொடியோய்நின் வலவயின் நிறுத்து
மேவ லுழந்தமை கூறு
நாவ லந்தணர் அருமறைப் பொருளே;
இஃது எருத்து.

இணை பிரியணி துணிபணி யெரிபுரைய3
விடரிடு சுடர்படர் பொலம்புனை வினைமலர்
நெரிகிட ரெரிபுரை தனமிகுதன முரண்மிகு
கடறரு மணியொடு முததியா கத்தொனறி
நெறிசெறி வெறியுறு முரல்விறல் வணங்கணங்குவில்
தாரணி துணிமணிவிய லெறுமெழில் புகழலர்மார்பி
னெரிவயிர் நுதியெறி படை யெருத்து மலையிவர் நவையில்
துணிபட லிலமணி வெயிலுற ழெழினக்
கிமையிருள கலமுறு கிறுபுரி யொருபுரி நாண்மலர்
மலரிலகினவளர் பருதியி னொளிமணி மார்பணி
மிகநாறுரு வினவிரை வளிமிகு கடுவிசை
உடுவுறு தலைநிரை யிதழணி வயிறிரிய அமரரைப்
போரெ ழுந்துடன் றிரைத்துரைஇய தானவர்
சீரழிப் புனல்மொழி பிழந்தூர
முதிர்பதி ரப்பல புலவந்தொடவமர் வென்றகணை;
இவை நான்கும் அராகம்.

பொருவ மென்ற மறந்தபக் கடந்து
செருவிடம் படுத்தது செயிர்தீர் அண்ணல்
இருவர் தாதை யிலங்குமுன் மாஅன்
றெருள நின்வர வறிதல்
மருளறு தேர்ச்சி முனைவர்க்கும் அரிது;
இஃது ஆசிரியம்.
அன்ன மரபி னனையோய் நின்னை
யின்னனென் றுரைத்த லெமக்கெவன் எளிது
இது பேரெண்.

அருமைநற் கறியினும் ஆய நிற்பயில்.
பெருமையின் வல்லா யாம்இவண் மொழிபவை
மெல்லிய எனாஅது வெறாஅ
தல்லியந் திருமார்ப நீயருளல் வேண்டும்;
இதுவும் ஆசிரியம்.

விறல்மிகு விழுச்சீ ரந்தணர் காக்கும்
அறனுமார்வலர்க் கருளுநீ;
திறனிலோர்த் திருத்திய தீதுதீர் கொள்கை
மறனு மாற்றலர்க் கணங்கு நீ;
அங்கண் வானத் தணிநிலாத் திகழ்தருந்
திங்களுந் தெறுகதிர்க் கனலியு நீ;
ஐற்தலை யுயரிய அணங்குடை யருந்திறல்
மைந்துடை யொருவனு மடங்கலும் நீ;
நலமுழு தளைஇய புகரறு காட்சிப்
புலம்பு வின்னாணூற்றமு நீ;
வலனுயர் எழிலியும் மாக விசும்பும்
நிலனு நீடிய இமயமும் நீ;
இவை யாறும் பேரெண்.

அதனால்;
தனிச்சொல்.
இன்னோர் அனையை இனையை யாலென
அன்னோர் யாமிவட் காணா மையிற்
பொன்னணி நேமி வலங்கொண் டேந்திய
மன்னிய முதல்வனை யாகலின்
நின்னோ ரனையைநின் புகழொடும் பொலிந்தே;
இது சுரிதகம்.

அன்றெனின்.
நின்னொக் கும்புகழ் நிழலவை
பொன்னொக்கு முடையவை
புள்ளின் கொடியவை புரிவளை யினவை
எள்ளுநர்க் கடந்திட்ட இகனேமியவை
மண்ணுற்ற மணிப யுருவினவை
எண்ணிறந்த புகழவை எழின்மார் பினவை;
இவை சிற்றெண்ணும், இடையெண்ணும், அளவெண்ணும்.
ஆங்கு;
தனிச்சொல்.

காமரு சுற்றமொ டொருங்குநின் னடியுறை
யாமியைந் தொன்றுபு வைகலும் பொலிகென
ஏமுறு நெஞ்சத்தேம் பரவுதும்
வாய்மொழி முதல்வநின் தாள்நிழல் தொழுதே. "

இதுசுரிதகம்.

இதுகடவுள்வாழ்த்து, ஈண்டோதப்பட்ட உறுப்புக்கள் மிக்குங் குறைந்தும் வருதல் இப்பாவிற் கியல்பென்று கொள்க. பிறவும் பரிபாடலகத்துக் கண்டுகொள்க.

"மாநிலந் தோன்றாமை மலிபெய னிலைஇ
ஏமநீ ரெழில்வான மிகுத்தரும் பொழுதினான்
நாகநீள் மணிவரை நறுமலர் பலவிரைஇக்
காமரு வையை கடுகின்றே கூடல்;
நீரணி கொண்டன்று வையை யெனவிரும்பித்
தாரணி கொண்ட உவகை தலைக்கூடி
ஊரணி கோலம் ஒருவர் ஒருவரிற்
சேரணி கொண்டு நிறமொன்று வெவ்வேறு
நீரணி கொண்ட நிறையணி அங்காடி
ஏரணி கொண்டார் இகல்;

கைபுனை தாரினர் கண்ணியர்
ஐயெனு மாவியர் ஆடையர்
நெய்யணி கூந்தலர் பித்தையர்
மெய்யணி யானை மிசைக்கொண் டொய்யெனத்
தங்காச் சிறப்பில் தளிரியலார் செல்லப்
பொங்கு புரவிப்புடைப் போவோரும் பொங்குசீர்
வையமுந் தேரும் அமைவோரும் எவ்வாயும்
பொய்யாம்போ யென்னாப் புடைபடைகூட் டிப்போவார்
மெய்யாப்பு மெய்யார மூடுவார் வையத்துக்
கூடுவார் ஊட லொழிப்பார் உணர்குவார்
ஆடுவார் பாடுவார் ஆர்ப்பார் நகுவார்நக்
கோடுவார் ஒடித் தளர்வார்போ யுற்றவரைத்
தேடுவார் ஊர்க்குத் திரிவார் இலராகிக்
கற்றாருங் கல்லா தவருங் கயவரும்
பெற்றாரும் பெற்றார்ப் பிழையாத பெண்டிரும்
பொற்றேரான் தானும் பொலம்புரிசைக் கூடலும்
முற்றின்று வையைத் துறை;

துறையாடுங் காதலர் தோள்புணையாக
மறையாடு வாரை அறியார் மயங்கிப்
பிறையேர் நுதலியர் எல்லாருந் தம்முன்
நிகழு நிகழ்ச்சி யெம்பாலென் றாங்கே
இகலுவ செல்வ நினைத்தெவட் கண்டிப்பால்
அகலல்கும் வையைத் துறை.

காதலான் மார்பிற் கமழ்தார் புனல்வாங்கி
ஏதிலாள் கூந்தல் இடக்கண்டு மற்றது
தாதாவென் றாட்குத் தானே புனல்தந்து
வேய்தந்த தென்னை விளைந்தமை மற்றது
நோதலே செய்யேன் நுணங்கிழையா யச்செவ்வி
போதலுண் டாங்கொல் அறிந்து புனல்புணர்த்த
தோஒ பெரிதும் வியப்பு.

கயத்தகப் பூப்பெய்த காமக் கிழமை
நயத்தகு நல்லாளைக் கூடுமா கூடு
முயக்குக்குச் செல்வல் முலையும் முயக்கத்து
நீரு மவட்குத் துணைக்கண்ணி னீர்விட்டோய்
நீயு மவட்குத் துணை;
பணிவில் உயர்சிறப்பிற் பஞ்சவன் கூடல்
மணியெழில் மாமேனி முத்த முறுவல்
அணிபவளச் செவ்வாய் அறங்காவற் பெண்டிர்
மணியணி தம்முரிமை மைந்தரோ டாடத்
தணிவின்று வையைப் புனல்;

புனலூடு போவதோர் பூமாலை கொண்டை
எனலூழ் வகையெய்திற் றென்றேற்றுக் கொண்டை
புனலூடு நாடறியப் பூமாலை அப்பி
நினைவாரை நெஞ்சிடுக்கண் செய்யுங் கனல்புடன்
கூடாமுன் ஊடல் கொடியதிறங் கூடினால்
ஆடாளோ வூர்க்கலர் வந்து;

எனவாங்கு,

ஈப்பா யடுநறாக் கொண்டதில் வியாறெனப்
பார்ப்பார் ஒழிந்தார் படிவு;

மைந்தர் மகளிர் மணவிரை பூசிற்றென்
றந்தணர் தோயலர் ஆறு;

வையைத் தேமொழி வழுவழுப் புற்றென
ஐயர்வாய் பூசுறார் ஆறு;
விரியரை விரைதுறை கரையழி பிழியூர ஊர்தரும் புனல்
கரையொடு கடலிடை வரையொடு கடலிடை நிரைநிரை நீர்தருநுரை
நுரையுடன் மதகுதொ றிழிதரு புனல்கரை புரளிய செலமறிகடல்
புகுமள வளவிய லிச்சிறை தனிவின்று வெள்ளமிகை;

வரைபல புரையுயர் கயிறணி பயிறொழில்
மணியணி யானைமிசை மைந்தரும் மடவாரும்
நிரைநிரை குழீஇயினர் உடன் சென்று
குருமணி யானை இயறேர்ப் பொருநன்
திருமருத முன்றுறை முற்றங் குறுகித்
தெரிமருதம் பாடும் பிணிதோள்யாழ்ப் பாணர்
பாய் புனலாட4
ஆடி யாடி யருளியவர்
ஊடி யூடி யுணர்த்தப் புகன்று
கூடிக் கூடி மகிழ்பு மகிழ்பு
தேடித் தேடிச் சிதைசிதைபூச்
சூடிச் சூடிக்கை தொழுது தொழுதும்
இழுதொடு நின்ற புனல் வையை
விழுதொகை நல்லரு மைந்தரும் ஆடி
இமிழ்வது போன்றதிந் நீர் குணக்குச் சான்றீர்
முழுவது மிச்சிலா உண்டு;

சாந்துங் கமழ்தாருங் கோதையுங் சுண்ணமுங்
கூந்தலும் பித்தையுஞ் சோர்ந்தன
பூவினு மல்லாற் சிறிதானு நீர்நிறந்தா
ஆறொன்றோ திவ்வையை யாறு;
மழைநீர்க் குளத்து வாய்பூசி யாடுங்
கழுநீர மஞ்சனக் குங்குமக் கலக்கல்
வழிநீர வீழுநீரன்று வையை;

வெருவரு கொல்லியானை வீங்குதோள் மாறன்
உருகெழு கூட லவரொடும் வையை
வருபுன லாடிய தன்மை பொருவுங்கால்
இருமுந்நீர் வையம் பிடித்தென்னை யானூர்க்
கொருநிலையு மாற்ற இயையர் வருமாவில்5
அந்தர வான்யாற் றாயிரங் கண்ணினான்
இந்திரன் ஆடுந் தகைத்து.

இது காமப் பொருளாகி வரும் வெண்பா மிக்குவந்த பாட்டு.
(117)

1. (பாடம்) எழில்வேழம்.

2. பிறங்கும்.

3. (பாடம்) இணைபிரி யணிதுணி பிணிமணி எரிபுரை.

4. (பாடம்) பாடிப் பாடிப் பாய்புனல்.

5. (பாடம்) வருமரபின்.