செய்யுளியல்

435ஒத்தா ழிசைக்கலி கலிவெண் பாட்டே
கொச்சகம் உறழொடு கலிநால் வகைத்தே.
என் - னின் இனிக் கலிப்பாப் பாகுபடுமாறு உணர்த்துதல் நுதலிற்று.

ஒத்தாழிசைக் கலியும் கலிவெண்பாட்டும் கொச்சகமும் உறழ்கலியும் என நான்கு வகைப்படுங் கலிப்பா என்றவாறு.

அவையாமாறு முன்னர்க் காட்டுதும் .

"இருவயின் ஒத்தும் ஒவ்வா இயலினுந்
தெரியிழை மகளிரொடு மைந்தரிடை வரூஉங்
கலப்பே யாயினும் புலப்பே யாயினும்
ஐந்திணை மரபின் அறிவுவரத் தோன்றிப்
பொலிவொடு புணர்ந்த பொருட்டிற முடையது
கலியெனப் படூஉங் காட்சித் தாகும்."


என்று அகத்தியனார் ஓதுதலின் கலிப்பா அகப்பொருளென வழங்கும்.

(123)