இது பிரிவின்கண் தலைமகற்குக் கூற்றுநிகழும் இடன் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) ஒன்றாத் தமரினும் பருவத்தும் சுரத்தும் ஒன்றிய மொழியொடு வலிப்பினும் விடுப்பினும் என்பது; வரைவு உடன் படாத தமர்கண்ணும் பருவத்தின்கண்ணும் சுரத்தின்கண்ணும் பொருந்திய சொல்லொடு தலைமகளை உடன் கொண்டுபோகத் துணியினும் விடுத்துப்போகினும் கிழவோற்குக் கூற்று நிகழும் என்றவாறு. 'உரைத்திற நாட்டம் உளவாம் கிழவோற்கு ' என்பதை ஏனைய பகுதிக்கும் ஒட்டுக. வலித்தற்குச் செய்யுள் " ஆறுசெல் வருத்தத்துச் சீறடி சிவப்பவுஞ் சினைநீங்கு தளிரின் வண்ணம் வாடவுந் தான்வரல் துணிந்த இவளினும் இவளுடன் வேய்பயில் அழுவம் உவக்கும் பேதை நெஞ்சம் பெருந்தகவு உடைத்தே" எனவும்," வேட்டச் செந்நாய் கிளைத்தூண் மிச்சில் குளவி மொய்த்த அழுகற் சின்னீர் வளையுடைக் கையள் எம்மோ டுணீஇயர்2 வருகதில் அம்ம தானே அளியளோ அளியள்என் நெஞ்சமர்ந் தோளே" (குறுந்.56) எனவும் வரும்.அவ்வழி இடைச்சுரத்திற் கூறியதற்குச் செய்யுள்
"அழிவில முயலும் ஆர்வ மாக்கள் வழிபடு தெய்வம் கண்கண் டாஅங்கு அலமரல் வருத்தந் தீர யாழநின் நலமென் பணைத்தோ ளெய்தின மாகலிற் பொரிப்பூம் புன்கி னெழிற்றகை யொண்முறி சுணங்கணி வனமுலை யணங்குகொளத் திமிரி நிழல்காண் தோறும் நெடிய வைகி மணல்காண் தோறும் வண்டல் தைஇ வருந்தா தேகுமதி வாலெயிற் றோயே மாநனை கொழுதி மகிழ்குயில் ஆலும் நறுந்தண் பொழில் கானங் குறும்பல் ஊரயாஞ் செல்லு மாறே " (நற். 9) என வரும்,விடுத்தற்குச் செய்யுள் "இரும்புலிக் கிரிந்த கருங்கட் செந்நாகு நாட்டயிர் கடைகுரல் கேட்டொறும் வெரூஉம் ஆநிலைப் புள்ளி அல்க நம்மொடு மானுண் கண்ணியும் வருமெனின் வாரார் ஆயரோ பெருங்க லாறே " எனவரும். இஃது உடன்கொண்டு பெயர்தல் வேண்டுமென்ற தோழிக்குக் காட்டது கடுமை கூறி விடுத்தது."கிளிபுரை கிளவியாய் எம்மொடு நீவரின் தளிபொழி தளிரன்ன எழில்மேனி கவின்வாட முளியரில் பொத்திய முழங்கழல் இடைபோழ்ந்த வளியுறின் அவ்வெழில் வாடுவை யல்லையோ" (கலி. பாலை.12) என்பது தலைவிக்குக் காட்டது கடுமை கூறி விடுத்தது.இடைச்சுரம் மருங்கின் அவள் தமர் எய்திக் கடைக்கொண்டு பெயர்தலில் கலங்கு அஞர் எய்திக் கற்பொடு புணர்ந்த கௌவை உளப்பட அப்பால் பட்ட ஒரு திறத்தானும் என்பது, தலைமகள் செல்கின்ற இடைச்சுரத்திடைத் தலைமகள் தமர் எய்தி மீட்டுக்கொண்டு பெயர்தல் மரபாதலின் அங்ஙனம் பெயர்வர் எனக் கலங்கி வருத்தமுற்றுக் கற்பொடு புணர்ந்த அலர் உளப்பட அப்பகுதிப்பட்ட உடன்போக்கின் கண்ணும் அவற்குக் கூற்று நிகழும் என்றவாறு. அவ்வழி, வருவரெனக் கூறலும் வந்தவழிக் கூறலும் உளவாம். உதாரணம் "வினையமை பாவையின் இயலி நுந்தை மனைவரை இறந்து வந்தனை யாயின் தலைநாட் கெதிரிய தண்பெயல் எழிலி அணிமிகு கானத் தகன்புறம் பரந்த கடுஞ்செம் மூதாய் கண்டுங் கொண்டும் நீவிளை யாடுக சிறிதே யானே மழகளிறு உரிஞ்சிய பராஅரை வேங்கை மணலிடு மருங்கின் இரும்புறம் பொருந்தி அமர்வரின் அஞ்சேன் பெயர்க்குவன் நுமர்வரின் மறைகுவென் மாஅ யோளே. " (நற்.362) இது வருவர் என ஐயுற்றுக்கூறியது. 'கற்பொடு புணர்ந்த கௌவை ' க்குச் செய்யுள் வந்தவழிக் கண்டுகொள்க.நாளது சின்மையும், இளமையது அருமையும், தாளாண் பக்கமும், தகுதியது அமைதியும், இன்மையது இளிவும், உடைமையது உயர்ச்சியும், அன்பினது அகலமும், அகற்சியது அருமையும், ஒன்றாப் பொருள்வயின் ஊக்கிய பாலினும் என்பது; நாளது சின்மை முதலாகச் சொல்லப்பட்ட எட்டனையும் பொருந்தாத பொருட்கண் ஊக்கிய பக்கத்தினும் அவற்றுக் கூற்று நிகழும் என்றவாறு. 'ஒன்றா' என்னும் பெயரெச்சம் 'பால்' என்னும் பெயர் கொண்டு முடிந்தது, அது 'பொருள்வயி னூக்கிய பால்' என அடையடுத்து நின்றது. நாளது சின்மையை ஒன்றாமையாவது, யாக்கை நிலையாது என உணரும் உணர்ச்சியைப் பொருந்தாமை. இளமையது அருமையை ஒன்றாமையாவது, பெறுதற்கரிய இளமை நிலையாது என உணரும் உணர்ச்சியைப் பொருந்தாமை. தாளாண் பக்கத்தை ஒன்றாமையாவது, முயற்சியான் வரும் வருத்தத்தை உணரும் உணர்ச்சியைப் பொருந்தாமை. தகுதியது அமைதியை ஒன்றாமையாவது, பொருண்மேற் காதல் உணர்ந்தோர்க்குத் தகாது என உணரும் உணர்ச்சியைப் பொருந்தாமை, இன்மையது இளிவை ஒன்றாமையாவது, இன்மையான் வரும் இளி வரவினைப் பொருந்தாமை. உடைமையது உயர்ச்சியை ஒன்றாமையாவது, பொருள் உடையார்க்கு அமைவு வேண்டுமன்றே, அவ்வமைவினைப் பொருந்தாமை: அஃதாவது மென்மேலும் ஆசை செலுத்துதல். அன்பினது அகலத்தை ஒன்றாமையாவது, சிறந்தார்மாட்டுச் செல்லும் அன்பினைப் பொருந்தாமை. அகற்சியது அருமையை ஒன்றாமையாவது, பிரிதலருமையைப் பொருந்தாமை. பொருள் தேடுவார் இத்தன்மையராதல் வேண்டுமென ஒருவாற்றான் அதற்கு இலக்கணங் கூறியவாறு. வாயினும் கையினும் வகுத்த பக்கமோடு ஊதியம் கருதிய ஒரு திறத்தானும் என்பது; வாயான் வகுத்த பக்கமோடும் கையான் வகுத்த பக்கமோடும் பயன் கருதிய ஒரு கூற்றானும் அவற்குக் கூற்று நிகழும் என்றவாறு. வாயான் வகுத்த பக்கமாவது ஓதுதல். கையான் வகுத்த பக்கமாவது - படைக்கலம் பயிற்றலும் சிற்பங் கற்றலும். ஊதியங் கருதிய ஒரு திறனாவது மேற்சொல்லப்பட்ட பொருள்வயிற் பிரிதலன்றி அறத்திறங் காரணமாகப் பிரியும் பிரிவு. இது மறுமைக்கண் பயன் தருதலின் 'ஊதியம்' ஆயிற்று. "அறத்தினூஉங் காக்கமு மில்லை யதனை மறத்தலி னூங்கில்லை கேடு" (குறள் - 32) என்பதனானும் அறிக.புகழும் மானமும் எடுத்து வற்புறுத்தலும் என்பது: பிரிந்ததனான் வரும் புகழும் பிரியாமையான் வரும் குற்றமும் குறித்துத் தலைமகளை யான் வருந்துணையும் ஆற்றியிருத்தல் வேண்டுமெனக் கூறுதற் கண்ணும் அவற்குக் கூற்றுநிகழும் என்றவாறு. பொருள்வயின் ஊக்கிய பாலினும் ஊதியம் கருதிய ஒரு திறத்தானும் வற்புறுத்தல் எனக்கூட்டுக. உதாரணம் "அறனு மீகையு மன்புங் கிளையும் புகழு மின்புந் தருதலிற் புறம்பெயர்ந்து தருவது துணிந்தமை பெரிதே விரிபூங் கோதை விளங்கிழை பொருளே" என வரும்.தூதிடை இட்ட வகையினாலும் என்பது: இரு பெரு வேந்தர் இகலியவழிச் சந்து செய்தற்குத் தூதாகிச் செல்லும் வகையின் கண்ணும் அவற்குக் கூற்று நிகழும். ஆகித் தோன்றும் பாங்கோர் பாங்கினும் என்பது: தனக்குப் பாங்காகித் தோன்றுவார் பக்கத்துப் பிரியும் வழியும் அவற்குக் கூற்று நிகழும் என்றவாறு. அதுவும் வேந்தற்கு உற்றுழிப் பிரியும் பிரிவு. மூன்றன் பகுதியாவன, நால்வகை வலியினும் தன்வலியும் துணைவலியும் வினைவலியும் என்பன. அவை பகைவர்மாட்டுள்ளன. மண்டிலத்து அருமையாவது, பகைவர் மண்டிலங் கொண்ட அருமை என்றவாறு. தோன்றல் சான்ற என்பது, [இவை] மிகுதல் சான்ற என்றவாறு. மாற்றோர் மேன்மையாவது, மாற்றோரது உயர்ச்சியானும் என்றவாறு. ஆறன் உருபு எஞ்சிநின்றது. மூன்றன் பகுதியானும் மண்டிலத்தருமையானும் தோன்றல் சான்ற மாற்றோர் எனக் கூட்டுக. பாசறைப் புலம்பல் என்பது, பாசறைக்கண் தலைமகன் தனிமையுரைத்தல் என்றவாறு. தூதிடை வகையினானும், வேந்தற்கு உற்றுழியினானும், மாற்றோர் மேன்மையினானும் பாசறைக்கட் புலம்பல்எனக் கூட்டுக. அஃதாவது, தூதினும் வேந்தற்குற்றுழியினும் பகைதணிவினையினும் பாசறைக்கட் புலம்பல் உளதாகும் எனக்கொள்க. உதாரணம் "வேளாப் பார்ப்பான் வாளரந் துமித்த வளைகளைந் தொழிந்த3 கொழுந்தி னன்ன தளைபிணி அவிழாச் சுரிமுகப்4 பகன்றை சிதரலந் துவலை தூவலின் மலருந் தைஇ நின்ற தண்பெயற் கடைநாள் வயங்குகதிர் கரந்த வாடை வைகறை விசும்புரி வதுபோல் வியலிடத் தொழுகி மங்குல் மாமழை தென்புலம் படரும் பனியிருங் கங்குலுந் தமியள் நீந்தித் தம்மூ ரோளே நன்னுதல் யாமே கடிமதிற் கதவம் பாய்தலின் தொடிபிளந்து நுதிமுகம் மழுங்கிய மண்ணைவெண் கோட்டுச் சிறுகண் யானை நெடுநா ஒண்மணி கழிப்பிணிக் கறைத்தோல் பொழிகணை உதைப்பத் தழங்குகுரல் முரசமொடு மயங்கும் யாமத்துக் கழித்துறைச் செறியா வாளுடை யெறுழ்த்தோள் இரவுத்துயில் மடிந்த தானை உரவுச்சின வேந்தன் பாசறை யோமே." (அகம்.24) இது வேந்தற்கு உற்றுழிப் பிரிந்த தலைமகன் கூற்று."வைகுபுலர் விடியல் மைபுலம் பரப்பக் கருநனை அவிழ்ந்த ஊழுறு முருக்கின் எரிமருள் பூஞ்சினை யினச்சிதர் ஆர்ப்ப நெடுநெல் அடைச்சிய கழனியேர் புகுத்துக் குடுமிக் கட்டிய படப்பையொடு மிளிர அரிகால் போழ்ந்த தெரிபகட்டு உழவர் ஓதைத் தெள்விளி புலந்தொறும் பரப்பக் கோழிணர் எதிரிய மரத்த கவினிக் காடணி கொண்ட காண்டகு பொழுதின் நாம்பிரி புலம்பின் நலஞ்செலச் சாஅய் நம்பிரிபு அறியா நலனொடு சிறந்த நற்றோள் நெகிழ வருந்தினள் கொல்லோ மென்சிறை வண்டின் தண்கமழ் பூந்துணர் தாதின் துவலை தளிர்வார்ந் தன்ன அங்கலுழ் மாமைக் கிளைஇய நுண்பல் தித்தி மாஅ யோளே." (அகம். 41) என்பது பகையிற் பிரியும் தலைமகன் கூற்று. பிறவும் அன்ன. இவ்வாறு வருவன குறித்த பருவம் பிழைத்துழி என்று கொள்க.முடிந்த காலத்துப் பாகனொடு விரும்பிய வினைத்திற வகையினும் என்பது : வினை முடிந்த காலத்துப் பாகனொடு விரும்பப்பட்ட வினைத் திறத்தினது வகையின் கண்ணும் அவற்குக் கூற்று நிகழும் என்றவாறு. அது பாசறைக்கட் கூறலும், மீண்டு இடைச்சுரத்துக் கூறலும் என இருவகைப்படும். இன்னும், 'வகை' என்றதனான் நெஞ்சிற்குக் கூறியனவுங் கொள்க. உதாரணம் "வந்துவினை முடித்தனன் வேந்தனும் பகைவரும் தந்திறை கொடுத்துத் தமரா யினரே முரண்செறிந் திருந்த தானை இரண்டும் ஒன்றென அறைந்தன பணையே நின்தேர் முன்னியங்கு ஊர்தி பின்னிலை யீயாது ஊர்க பாக ஒருவினை கழிய நன்னன் ஏற்றை நறும்பூண் அத்தி துன்னருங் கடுந்திறல் கங்கன் கட்டி பொன்னணி வல்விற் புன்றுறை யென்றாங் கன்றவர் குழீஇய அளப்பருங் கட்டூர்ப் பருந்துபடப் பண்ணிப் பழையன் பட்டெனக் கண்டது நோனான் ஆகித் திண்டேர்க் கணையன் அகப்படக் கழுமலந் தந்த பிணையலங் கண்ணிப் பெரும்பூண் சென்னி அழும்பில் அன்ன அறாஅ யாணர்ப் பழம்பல் நெல்வின் பல்குடிப் பரவைப் பொங்கடி படிகயம் மண்டிய பசுமிளைத் தண்குட வாயில் அன்னோள் பண்புடை ஆகத் தின்றுயில் பெறவே" (அகம்.44) எனவும், "கேள்கேடு ஊன்றவுங் கிளைஞர் ஆரவும் கேளல் கேளிர் கெழீஇயினர் ஒழுகவும் ஆள்வினைக் கெதிரிய ஊக்கமொடு புகல்சிறந்து ஆரங் கண்ணி அடுபோர்ச் சோழர் அறங்கெழு நல்லவை உறந்தை அன்ன பெறலரு நன்கலன் எய்தி நாடும் செயலருஞ் செய்வினை முற்றின மாயின் அரண்பல கடந்த முரண்கொள் தானை வாடா வேம்பின் வழுதி கூடல் நாளங் காடி நாறு நறுநுதல் நீளிருங் கூந்தல் மாஅ யோளொடு வரைகுயின் றன்ன வான்றோய் நெடுநகர் நுரைமுகந் தன்ன மென்பூஞ் சேக்கை நிவந்த பள்ளி நெடுஞ்சுடர் விளக்கத்து நலங்கேழ் ஆகம் பூண்வடுப் பொறிப்ப முயங்குகஞ் சென்மோ நெஞ்சே வரிநுதல் வயந்திகழ்பு இமிழ்தரும் வாய்புகு கடாஅத்து மீளி முன்பொடு நிலனெறியாக் குறுகி ஆள்கோட் பிழையா அஞ்சுவரு தடக்கைக் கடும்பகட் டியானை நெடுந்தேர்க் கோதைத் திருமா வியனகர்க் கருவூர் முன்றுறைத் தெண்ணீர் உயர்கரைக் குவைஇய தண்ணான் பொருநை மணலினும் பலவே" (அகம். 93) எனவும் வருவன நெஞ்சிற்குக் கூறியன."கொல்வினைப் பொலிந்த கூர்ங்குறும் 5புழுகின் வில்லோர் தூணி வீங்கப் பெய்த அப்புநுனை ஏய்ப்ப அரும்பிய இருப்பைச் செப்படர் அன்ன செங்குழை அகந்தோ றிழுதின் அன்ன தீம்புழல் துய்வாய் உழுதுகாண் துளைய வாகி ஆர்கழல்பு ஆலி வானிற் காலொடு பாறித் துப்பின் அன்ன செங்கோட் டியவின் நெய்த்தோர் மீமிசை நிணத்திற் பரிக்கும் அத்த நண்ணிய அங்குடிச் சீறூர்க் கொடுநுண் ணோதி மகளிர் ஓக்கிய தொடிமாண் உலக்கைத் தூண்டுரற் பாணி நெடுமால் வரைய குடிஞையோ டிரட்டும் குன்றுபின் ஒழியப் போகி உரந்துரந்து ஞாயிறு படினும் ஊர்சேய்த் தெனாது துனைபரி துரக்கும் துஞ்சாச் செலவின் எம்மினும் விரைந்துவல் லெய்திப் பன்மாண் ஓங்கிய நல்லில் ஒருசிறை நிலைஇப் பாங்கர்ப் பல்லி படுதொறும் பரவிக் கன்றுபுகு மாலை நின்றோள் எய்திக் கைகவியாச் சென்று கண்புதையாக் குறுகிப் பிடிக்கை யன்ன பின்னகந் தீண்டித் தொடிக்கை தைவரத் தோய்ந்தன்று கொல்லோ நாணொடு மிடைந்த கற்பின் வாள்நுதல் அந்தீங் கிளவிக் குறுமகள் மென்றோள் பெறநசைஇச் சென்றஎன் நெஞ்சே." (அகம்.9) இஃது இடைச்சுரத்துச் சொல்லியது. காவல் பாங்கின் ஆங்கு ஓர் பக்கம் என்பது காவற்பக்கத்தின்கண் ஒரு பிரிவினும் கூற்று நிகழும் என்றவாறு. 'ஆங்கு' என்பது இடங்குறித்து நின்றது; "நின்னாங்கு வரூஉமென் நெஞ்சினை" (கலி. பாலை.22) என்றாற் போலக் கொள்க. இது வாரியுள் யானை காணவும், நாடுகாணவும், புனலாடவும், கடவுளரை வழிபடவும் பிரியும் பிரிவு. ஒருபக்கம் நாட்டெல்லையிலிருந்து பகைவரைக் காக்கவேண்டிப் பிரிவது பகைவயிற் பிரிவின் அடங்குதலின் அஃததன் உண்மைக்கண் பிரியும் பிரிவு என்று ஓதப்பட்டது. பரத்தையின் அகற்சியின் என்பது, பரத்தையரிற் பிரியும் பிரிவின்கண்ணும் என்றவாறு. உம்மை எஞ்சி நின்றது. பிரிந்தோள் குறுகி இரத்தலும் தெளித்தலும் என இருவகையோடு என்பது: பிரியப்பட்ட தலைமகளைக் குறுகி இரத்தலும் தெளித்தலும் ஆகிய இரண்டு வகையோடே கூட என்றவாறு. காவற் பாங்கின் ஆங்கோர் பக்கத்தினும் பரத்தையின் அகற்சியினும் பிரியப்பட்டார் எனக் கூட்டுக. அஃதேல் பரத்தையின் அகற்சி ஊடலாகாதோ வெனின், ஊடலின் மிக்க நிலையே ஈண்டுக் கூறுகின்றதெனக் கொள்க. கடவுள்மாட்டுப் பிரிந்துவந்த தலைமகனைத் தலைமகள் புணர்ச்சி மறுத்தற்குச் செய்யுள்மருதக்கலியுள் கடவுட் பாட்டினுள்,
" வண்டூது சாந்தம் வடுக்கொள நீவிய தண்டாத்தீஞ் சாயல் பரத்தை வியன்மார்ப பண்டின்னை யல்லைமன் ஈங்கெல்லி வந்தீயக் கண்ட தெவன்மற் றுரை; நன்றும், தடைஇய மென்தோளாய் கேட்டீவா யாயின் உடனுறை வாழ்க்கைக் குதவி யுறையும் கடவுளர் கண்தங்கி னேன் ; சோலை,மலர்வேய்ந்த மான்பிணை யன்னார் பலர்நீ கடவுண்மை கொண்டொழுகு வார்" எனவும்,"சிறுவரைத் தங்கின் வெகுள்வர் செறுத்தக்காய் தேறினென் சென்றீநீ செல்லா விடுவாயேல் நற்றார் அகலத்துக் கோர்சார மேவிய நெட்டிருங் கூந்தற் கடவுள ரெல்லார்க்கும் முட்டுப்பா டாகலும் உண்டு" (கலி.மரு.28) எனவும் புணர்ச்சிக்கு உடன்படாது கூறுதலானும், குறும்பூழ்ப் பாட்டினுள்,"விடலைநீ நீத்தலின் நோய்பெரி தேய்க்கும் நடலைப்பட் டெல்லாநின் பூழ்" என்றவழி மருதநிலத்தின் தலைமகனை விடலை என்றமையானும், இதனுள், "பொய்யெல்லாம் ஏற்றித் தவறு தலைப்பெய்து கையொடு கண்டாய் பிழைத்தேன் அருள்இனி" (கலி.மரு.30) என இரந்தமையானும் கண்டுகொள்க."ஒரூஉக், கொடியியல் நல்லார் குரனாற்றத் துற்ற முடியுதிர் பூந்தாது மொய்ம்பின வாகத் தொடீஇய எமக்குநீ யாரை பெரியார்க்கு அடியரோ ஆற்றா தவர்; கடியதமக், கியார்சொல்லத் தக்கார் மாற்று,6 வினைக்கெட்டு, வாயல்லா வெண்மை யுரையாது கூறுநின் மாய மருள்வார் அகத்து; ஆயிழாய், நின்கண் பெறினல்லால் இன்னுயிர் வாழ்கல்லா என்கண் எவனோ தவறு; இஃதொத்தன், புள்ளிக் களவன் புனல்சேர் பொதுக்கம்போல் வள்ளுகிர் போழ்ந்தனவும் வாளெயி றுற்றனவும் ஒள்ளிதழ் சோர்ந்தநின்7 கண்ணியும் நல்லார் சிரறுபு சீறச் சிவந்தநின் மார்பும் தவறாதல் சாலாவோ கூறு; அதுதக்கது, வேற்றுமை என்கண்ணோ ஓராதி தீதின்மை தேற்றக்கண் டீயாய் தெளிக்க; இனித்தேற்றேம் யாம் தேர்மயங்கி வந்த தெரிகோதை யந்நல்லார் தார்மயங்கி வந்த தவறஞ்சிப் போர்மயங்கி நீகூறும் பொய்ச்சூள் அணங்காகின் மற்றினி யார்மேல் விளியுமோ கூறு" (கலி.மரு.23) இதனுள் இரத்தலும் தெளித்தலும் வந்தவாறு கண்டுகொள்க.கலித்தொகையிற் கடவுட் பாட்டினுள் உரிப்பொருண்மை பற்றி வரும் பாட்டுக்களும் மருதநிலத்துத் தலைமகன் பெயர் கூறாது பிறபெயர் படக் கோத்தமையானும் ஊடற்பொருண்மையின் வேறுபாடுண்மை அறிக. 'உரைத்திறம் நாட்டம் கிழவோன் மேன' என்பது, இவ்விவ்விடங்கள் பற்றி உரையாடுங் குறிப்புத் தலைமகன் மேலன என்றவாறு. (44)
1. கடை- பின். 'தமர்' எனவே, தந்தை தன்னையரை உணர்த்திற்று. முன்னர்த் 'தாய்நிலை கண்டு தடுப்பினும் '(40) என்றலின், தாயர்தாமே சென்றமை முன்னத்தால் தமர் உணர்ந்து வலிதிற்கொண்டு அகன்றானோ என்று கருதியும். அவ் வரைவு மாட்சிமைப்படுத்தற்கும் பின் சென்று அவள் பெயராமற் கற்பொடு புணர்ந்தமை கண்டு தலைவன் எடுத்துக் கொண்ட வினைமுடித்தலும் ஒருதலை என்று உணர்ந்து பின்னர் அவரும் போக்குடன்பட்டு மீள்ப என்று கொள்க. அவ்வெளிப்பாடு கற்பாதலிற் 'கற்பு என்பார். ' உளப்பட ' என்றதனால் வலித்தலும் விடுத்தலும் அகப்பட என்றாராயிற்று. (நச்சி.) (பாடம்) 2. டுணீஇய. (பாடம்) 3. தொழித்த 4. சுரிமுகிழ்ப். (பாடம்) 5. குறும்பெஃகின். (பாடம்) 6. தக்கரா மற்று. (பாடம்) 7. சேர்ந்தநின்.
|