செய்யுளியல்

441போக்கியல் வகையே வைப்பெனப் படுமே
தரவியல் ஒத்தும் அதனகப் படுமே
புரைதீர் இறுதி நிலையுரைத் தன்றே.
என் - னின் , சுரிதகமாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

சுரிதகம் என்பது வைப்பெனவும் படும் . அது தரவோ டொத்த அளவிற்றாகியும் அதனிற்குறைந்த அளவிற்றாகியும் குற்றந் தீர்ந்த பாட்டினிறுதி நிலையை உரைத்ததென்றவாறு.

தரவியலொத்தலாவது சிறுமை நான்கடி யாகியும் பெருமை பன்னிரண்டடியாகியும் வருதல் . அதனகப்படுதலாவது சிறுமை மூன்றடியானும் இரண்டடியானும் வருதல் . இச்சூத்திரங்கள் ஓதினமுறையானே பாட்டு வருமென்றுகொள்க . மேல்துள்ளலோசைத் தாகியும் . நிரை முதலாகிய வெண்பாவுரிச்சீர் மிக்கும் . சுரிதகம் ஆசிரியத்தானாதல் வெண்பாவானாதல் வருமெனவுங் கூறிய இலக்கணங்களும் அறிந்துகொள்க.


உதாரணம்

" பாடின்றிப் பசந்தகண் பைதல பனிமல்க
வாடுபு வனப்போடி வணங்கிறை வளையூர
ஆடெழில் அழிவஞ்சா தகன்றவர் திறந்தினி
நாடுங்கால் நினைப்பதொன்றுடையேன்மன் அதுவுந்தான்.

தொன்னலந் தொலைபீங்கியாந் துயருழப்பத் துறந்துள்ளார்
துன்னிநங் காதலர் துறந்தேகு மாரிடைக்
கன்மிசை உருப்பறக் கனைதுளி சிதறென
இன்னிசை யெழிலியை யிரப்புவும்1 இயைவதோ;

புனையிழாய் ஈங்குறாம் புலம்புறப் பொருள்வெஃகி
முனையென்னார் காதலர் முன்னிய ஆரிடைச்2
சினைவாடச் சிறக்குநின் சினந்தணிந் தீகெனக்
கனைகதிர்க் கனலியைக் காமுறல் இயைவதோ;

ஒளியிழாய் ஈங்குநாம் துயர்கூரப் பொருள்வயின்
அளியொரீஇக் காதலர் அகன்றேகு மாரிடை
முளிமுதல் மூழ்கிய வெம்மைதீர்ந் துறுகென3
வளிதருஞ் செல்வனை வாழ்த்தவும் இயைவதோ;

இவைதாழிசை ,


எனவாங்கு , தனிச்சொல்

செய்பொருட் சிறப்பெண்ணிச் செல்வார்மாட் டினையன
தெய்வத்துத் திறனோக்கித் தெருமரல் தேமொழி
வறனோடின் வையத்து வான்றருங் கற்பினாள்
நிறனோடிப் பசப்பூர்த லுண்டென
அறனோடி விலங்கின்றவர் ஆள்வினைத் திறத்தே."

(கலி. 19)

இது சுரிதகம்.

இது நான்கடித்தரவும் நான்கடியான் மூன்று தாழிசையுந் தனிச் சொல்லும் ஐந்தடிச் சுரிதகமும் வந்த ஒத்தாழிசைக் கலிப்பா. இதனை நேரிசை யொத்தாழிசைக் கலிப்பா என்ப.

"வெல்புகழ் மன்னவன் விளங்கிய ஒழுக்கத்தான்
நல்லாற்றின் உயிர்காத்து நடுக்கறத் தான்செய்த
தொல்வினைப் பயன்துய்ப்பத் துறக்கம்வேட் டெழுந்தாற்போற்
பல்கதிர் ஞாயிறு பகலாற்றி மலைசேர
ஆனாது கலுழ்கொண்ட உலகத்து மற்றவன்
ஏனையான் அளிப்பான்போல் இகலிருள் மதிசீப்பக்
குடைநிழல் ஆண்டாற்கும் ஆளிய வருவாற்கும்
இடைநின்ற காலம்போல் இறுத்தந்த மருண்மாலை;
இது தரவு.

மாலைநீ , தூவறத் துறந்தாரை நினைத்தலிற் கயம்பூத்த
போதுபோற் குவிந்த என் எழினலம் எள்ளுவாய்
ஆய்சிறை வண்டார்ப்பச் சினைப்பூப்போல் தளைவிட்ட
காதலர்ப் புணர்ந்தவர் காரிகை கடிகல்லாய்;

மாலை நீ, தையெனக் கோவலர் தனிக்குழல் இசைகேட்டுப்
பையென்ற நெஞ்சத்தேம் பக்கம்பா ராட்டுவாய்
செவ்வழியாழ் நரம்பன்ன கிளவியார் பாராட்டும்
பொய்தீர்ந்த புணர்ச்சியுட் புதுநலம் கடிகல்லாய்;

மாலை நீ, தகைமிக்க தாழ்சினைப் பதிசேர்ந்து புள்ளார்ப்பப்
பகைமிக்க4 நெஞ்சத்தேம் புன்மையா ராட்டுவாய்
தகைமிக்க புணர்ச்சியார் தாழ்கொடி நறுமுல்லை
முகைமுகந் திறந்தன்ன முறுவலுங் கடிகல்லாய்;

இவை தாழிசை.

ஆங்க,

தனிச்சொல்.

"மாலையு மலரு நோனா தெம்வயின்
நெஞ்சமும் எஞ்சுமற் றில்ல எஞ்சி
உள்ளா தமைந்தோர் உள்ளும்
உள்ளில் உள்ளம் உள்ளுள் உவந்தே."

(கலி. 118)

இது சுரிதகம்.

இது தாழிசைதோறுந் தனிச்சொற் பெற்றுவந்த நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா .

'வயக்குறு மண்டிலம் ' என்னும் (கலி. 25) கலிப்பாவில் தரவு பன்னிரண்டடியான் வந்தது.

'இலங்கொளி மருப்பிற் கைம்மா ' என்னுங் (கலி . 23) கலிப்பாவினுள் இரண்டடியால் தாழிசை வந்தன.

'உண்கடன் வழிமொழிந் திரக்குங்கான் முகனும் ' என்னுங் (கலி 22) கலிப்பாவில் தாழிசை மூன்றடியான் வந்தன.

'ஆற்றியந்தணர் ' என்னும் கடவுட்பாட்டினுள் மூன்றடிச்சுரிதகம் வந்தது.

இனி , ஏனையடிகளால் வரும் தரவுந் தாழிசையும் சுரிதகமும் கலித்தொகையுட்கண்டு கொள்க.

 
(129)

1.(பாடம்) இரக்கவும்.

2.ஆற்றிடைச்

3.முளியரின் மூழ்கிய வெம்மைதீர்ந் தொழிகென.

4.(பாடம்) புரிக்க.