| என் - னின் மேலதற்கோர் புறனடை உணர்த்துதல் நுதலிற்று. மேற் சொல்லப்பட்ட எண் ஒரோவொன்று இடையொழிந்து வருதல் குற்றமாகாது தனிச்சொல் இல்லாத வழி யென்றவாறு. எனவே, சொல்லப்பட்ட உறுப்புக்கள் தனிச்சொல் வருவழி இடையொழியாமல் வருதல் வேண்டுமென்றவாறு . தனிச்சொல் உளப்பட ஐந்துறுப்புடைத்தாயிற்று. இனித் தனிச்சொல்லின்றி எண்ணிடையிட்டவழி ஒருபோகெனப் பெயர்பெறும். உதாரணம்"கெடலரு மாமுனிவர் கிளர்ந்துடன் தொழுதேத்தக் கடல்கெழு களைசுடரிற் கலந்தொளிரும் வாலுளைய அழல்வளை சுழல்செங்கண் அரிமாவாய் மலைந்தானைத் தாரொடு முடிபிதிரத் தமனியப் பொடிபொங்க வார்புன லிழிகுருதி அகலிடம் உடனனைப்பக் கூருகிரான் மார்பிடந்த கொலைமலி தடக்கையோய்; இது தரவு.முரசதிர வியன்மதுரை முழுவதூஉந் தலைபனிப்பப் புரைதொடித் திரள்திண்டோட் போர்மலைந்த மறமன்னர் அடியொடு முடியிறுப்புண் டயர்ந்தவர் நிலம்சேரப் பொடியெழ வெங்களத்துப் புடைத்ததுநின் புகழாமோ;
கலியொலி வியனுலகங் கலந்துடன் நனிநடுங்க வலியியல் அவிராழி மாறெதிர்ந்த மருட்சோர்வு மாணாதா ருடம்போடு மறம்பிதிர எதிர்கலங்கச் சேணுயர் இருவிசும்பிற் செகுத்ததுநின் சினமாமோ;
படுமணி இனநிரை பரந்துடன் இரிந்தோடக் கடுமுரண் எதிர்மலைந்த காரொலி எழிலேறு வெரிநொடு மருப்படர வீழ்ந்துதிறம் வேறாக எருமலி பெருந்தொழுவில் இறுத்ததுநின் இகலாமோ; இவை மூன்றுந் தாழிசை.இலங்கொளி மரகதம் எழின்மிகு வியன்கடல் வலம்புரித் தடக்கையோய் மானு நின்னிறம்; விரியிணர்க் கோங்குமும் வெந்தெரி பசும்பொன்னும் பொருகளி றட்டோய் புரையும் நின்னுடை; இவை பேரெண்.கண்கவர் கதிர்முடி கனலுஞ் சென்னியை; தண்சுடர் உறுபகை தணித்த ஆழியை; ஒலியியல் உவணம் ஓங்கிய கொடியினை; வலிமிகு சகட மாற்றிய அடியினை; இவை அளவெண்.போரவுணர்க் கடந்தோய் நீஇ புணர்மருதம் பிளந்தோய் நீஇ நீரகலம் அளந்தோய் நீஇ நிழல்திகழ்ஐம்1 படையோய் நீஇ இவை இடையெண்.எனவாங்கு ஊழிநீஇ ; உலகுநீஇ ; உருவுநீஇ ; அருவுநீஇ, அழிநீஇ ; அருளும்நீஇ ; அறமும் நீஇ ; மறமும் நீஇ; (இவைசிற்றெண்.) தனிச்சொல். அடுநிறல் ஒருவநிற் பரவுதும் எங்கோன் தொடுகழற் கொடும்பூட் பகட்டெழின் மார்பிற் கயலொடு கிடந்த சிலையுடைக் கொடுவரிப் புயலுறழ் தடக்கைச் செவ்வேல் அச்சுதன் 2தொன்று முதிர்கடல் உலகம் முழுதுடன் ஒன்றுபு திகிரி உருட்டுவோ னெனவே". இது ஆறடிச்சுரிதகம்.இவ்வாறு வருவதனை ஒருசாராசிரியர் அம்போதரங்க வொத்தாழிசைக் கலிப்பாவெனக் கூறுப.
1.( பாடம்) நிழல்திகழும். 2.தொன்றியல் உலகம் முழுவதும். (137)
|