என்-னின். நிறுத்தமுறையானே கொச்சகவொருபோகு உணர்த்துதல் நுதலிற்று. தரவின்றாகித் தாழிசை பெற்றும் என்பது - தரவு முதலாயின உறுப்புக்களுள், தரவின்றித் தாழிசை முதலியவுறுப்புக்கள் பெற்றும் என்றவாறு. 'தாழிசை பெற்றும் ' என்றதனால் தரவுதாமே வரினும் கொச்சக வொருபோகு ஆகுமென்று கொள்க. தாழிசையின்றிக் தரவுடைத்தாகியும் என்பது -தாழிசையின்றித் தரவு முதலியன உடைத்தாகியும் என்றவாறு. 'தரவுடைத்தாகியும் ' என்றதனால் தாழிசை தானே வரினும் என்று கொள்க. எண்ணிடை யிட்டுச் சின்னங்குன்றியும் என்பது - எண்ணாகிய உறுப்புக்களையிடையிட்டுத் தனிச்சொல் வாராதொழியினும் என்றவாறு. 'சின்னம் ' என்றதனால் எண்ணின்கண் இடையெண் சிற்றெண் என்பன குறையினும் என்றுமாம். அடக்கிய லின்றி அடிநிமிர்ந்தொழுகியும் என்பது - சுரிதகமின்றித் தரவுதானே நிமிர்ந்தொழுகி முடியினும் என்றவாறு. யாப்பினும் பொருளினும் வேற்றுமையுடையது என்பது - ஒத்தாழிசையின் யாக்கப்பட்ட யாப்பினும் அதற்குரித்தாக ஓதப்பட்ட கடவுள் வாழ்த்துப் பொருண்மையின்றிக் காமப் பொருளாக வரினும் என்றவாறு. கொச்சக வொருபோகாகும் என்ப என்பது - இவ்வகையினாற் சொல்லப்பட்டன கொச்சக வொருபோகெனக் குறிபெறும் என்றவாறு. எனவே ஒத்தாழிசைக்கு உறுப்பாகியவற்றுள் ஒன்றும் இரண்டும் குறைந்து வருவன கொச்சக வொருபோகெனப் பெயர் பெறும் என்று கொள்க. அவற்றுள் தரவின்றாகித் தாழிசைபெற்று வந்ததற்குச் செய்யுள்:- "நிரைதிமில் களிறாகத் திரையொலி பறையாகக் கரைசேர் புள்ளினத் தஞ்சிறை படையாக அரைசுகால் கிளர்ந்தன்ன வுரவுநீர்ச் சேர்ப்பகேள்; இது நான் கடியாகி வாராமையின் தாழிசை யாயிற்று.கற்பித்தான் நெஞ்சழுங்கப் பகர்ந்துண்ணான் விச்சைக்கண் தப்பித்தான் பொருளேபோல் தமியவே தேயுமால் ஒற்கத்துள் உதவியார்க் குதவாதான் மற்றவன் எச்சத்துள் ஆயினுமஃதெறியாது விடாதேகாண்;
கேளிர்கள் நெஞ்சழுங்கக் கெழுவுற்ற செல்வங்கள் தாளிலான் குடியேபோல் தமியவே தேயுமாற் சூள்வாய்த்த மனத்தவன் வினைபொய்ப்பின் மற்றவன் வாள்வாய்நன் றாயினும்அஃதெறியாது விடாதேகாண்; இவையிரண்டும் தாழிசை.ஆங்கு. தனிச்சொல். அனைத்தினிப் பெரும அதனிலை நினைத்துக்காண் சினைஇய வேந்தன் எயிற்புறத் திறுத்த வினைவரு பருவரல் போலத் துனைவரு நெஞ்சமொடு வருந்தினன் பெரிதே". (கலி) இது சுரிதகம். எனவரும்.தாழிசை தாமேயும் வரும். தாழிசையின்றித் தரவு முதலாயின வந்ததற்குச் செய்யுள்:- " செவ்விய தீவிய2 சொல்லி யவற்றொடு பைய முயங்கிய அஞ்ஞான் றவையெல்லாம் பொய்யாதல் யான்யாங் கறிகோமற் றைய3 அகனகர் கொள்ளா அலர்தலைத் தந்து பகல்முனி வெஞ்சுர முள்ளல் அறிந்தேன் மகனல்ல மன்ற வினி; இது தரவு. செல்லினிச் சென்றுநீ செய்யும் வினைமுற்றி அன்பற மாறியாம் உள்ளத் துறந்தவள் பண்பு மறிதிரோ வென்று வருவாரை என்திறம் யாதும் வினவல் வினவிற் பகலின் விளங்குநின் செம்மல் சிதையத் தவலருஞ் செய்வினை முற்றாமல் ஆண்டோர்4 அவலம் படுதலும் உண்டு. (கலி.19) இது சுரிதகம். தாழிசையுந் தனிச் சொல்லு மில்லை எண்ணிடையிட்டுச் சின்னங் குன்றியவதற்குச் செய்யுள்:- "மாமலர் முண்டகந் தில்லையோ டொருங்குடன் கானல் அணிந்த உயர்மணல் எக்கர்மேற் சீர்மிகு சிறப்பினோன் மரமுதற் கைசேர்த்த நீர்மலி கரகம்போற் பழந்தூங்கு முடத்தாழைப் பூமலர்ந் தவைபோலப் புள்அல்குந் துறைவகேள்; இது தரவு. ஆற்றுத லென்பதொன் றலந்தவர்க் குதவுதல் போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை பண்பெனப் படுவது பாடறிந் தொழுகுதல் அன்பெனப் படுவது தன்கிளை செறாஅமை அறிவெனப் படுவது பேதையார் சொல்நோன்றல் செறிவெனப் படுவது கூறியது மறாஅமை நிறையெனப் படுவது மறைபிறர் அறியாமை முறையெனப் படுவது கண்ணோடா துயிர்வௌவல் பொறையெனப் படுவதுபோற்றாரைப் பொறுத்தல்; இவை எண்.ஆங்கதை அறிந்தனிர்5 ஆயினென் தோழி நன்னுதல் நலனுண்டு துறத்தல் கொண்க தீம்பா லுண்பவர் கொள்கலம் வரைதல் நின்தலை வருந்தியாள் துயரஞ் சென்றனை களைமோ பூண்கநின் தேரே" (கலி) இது சுரிதகம். அடக்கிய லின்றி யடிநிமிர்ந்தொழுகல் வருமாறு."பால்மருள் மருப்பின் உரல்புரை பாவடி ஈர்நறுங் கமழ்கடாஅத் தினம்பிரி யொருத்தல் ஆறுகடி கொள்ளும் வேறுபுலம் படர்ந்து பொருள்வயிற் பிரிதல் வேண்டும் என்னும் அருளில் சொல்லும் நீசொல் லினையே நன்னர் நறுநுதல் நயந்தனை நீவி நின்னிற் பிரியலென் அஞ்சலோம் பென்னும் நன்னர் மொழியும் நீமொழிந் தனையே அவற்றுள் யாவோ வாயின மாஅன் மகனே கிழவர் இன்னோர் என்னாது பொருள்தான் பழவினை மருங்கிற் பெயர்புபெயர் புறையும் அன்ன பொருள்வயிற் பிரிவோய் நின்னின் றிமைப்புவரை வாழாள் மடவோள் அமைக்கலின் கொண்ட தோளிணை மறந்தே" (கலி.21) என வரும்.(140)
1.தாழிசை மூன்றாகிய வழி மூன்றடியானும் நான்டியானும் வரும். இனிப்பத்தும் பன்னிரண்டுமாகி ஒரு பொருள் மேல் வரும் பதினொன்றும் அகப்பட்டு நான்கடியின் ஏறாது வருதலும் அங்ஙனம் வருங்கால் தாழ்ந்த ஓசைபெற்றும் பெறாதும் வருதலும் அவையும் இருசீர் முதலாக எண் சீரளவும் வருதலும் என்றின்னோரன்ன பகுதியெல்லாம் அவ்வரையறையின்றித் தழுவப்பட்டன.(தொல்.பொருள். 461. பேரா). 2.(பாடம்) திவ்விய 3.(பாடம்) றைஇய. 4.முற்றாமை ஆண்டோர். 5.ஆங்கறிந் தொழுகினை.
|