செய்யுளியல்

455எருத்தே கொச்சகம் அராகஞ் சிற்றெண்
அடக்கியல் வாரமொ டந்நிலைக் குரித்தே.
என்-னின். அம்போதரங்கத்திற்கு உறுப்பாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

ஈண்டு எருத்து என்பது தரவு. கொச்சகமும் அராகமும் மேற்சொல்லப்பட்டன. எண்ணினுட் பேரெண்ணிற் சிற்றெண் வரப்பெறுமாயினும் இனிச்சொல்லப்பட்ட உறுப்பு முறையான் வருதலும் மயங்கிவருதலுங் கொள்க.

பரிபாடற்கும் இவைதாமே உறுப்பாயின் அதனோடிதனிடை வேறுபாடு என்னையெனின். அறுபதிற்றடியிற் குறைந்துவரின் முறை பிறழ்ந்து வருமெனவும் ஒத்துவரின் அறுபதின் மிக்கு வருமெனவுங் கொள்ளப்படும்.


உதாரணம்

"கண்ணகன் இருவிசும்பிற் கதழ்பெயல் கலந்தேற்ற
தண்நறும் பிடவமுந் தவழ்கொடித் தளவமும்
வண்ணவண் தேர்ன்றியும் வயங்கிணர்க் கொன்றையும்
அன்னவை பிறவும் பன்மலர் துதையத்
தழையுங் கோதையும் இழையும் என்றிவை
தைஇனர் மகிழ்ந்து திளைஇ விளையாடும்
மடமொழி யாயத் தவருள் இவள்யார்
உடம்போ டென்னுயிர் புக்கவ ளின்று;

இது தரவு.

ஓஒ இவள், பொருபுகல் நல்லேறு1 கொள்பவ ரல்லால்
திருமாமெய் தீண்டலர் என்று கருமமா
எல்லாருங் கேட்ப அறைந்தறைந் தெப்பொழுதுஞ்
சொல்லால் தரப்பட் டவள்;

சொல்லுக, பாணியேம் என்றார் அறைகென்றார் பாரித்தார்
மாணிழை யாறாகச் சாறு;
சாற்றுள், பெடையன்னார் கண்பூத்து நோக்கும்வா யெல்லாம்
மிடைபெறின் நேராத் தகைத்து;


இவை கொச்சகம்.

தகைவகை மிசைமிசைப் பாயியர் 2 ஆர்த்துடன்
எதிரெதிர் சென்றார் பலர்;
கொலைமலி சிலைசெறி செயிரயர் சினஞ்சிறந்
துருத்தெழுந் தோடின்று மேல்;


இவை அராகம்.

எழுந்தது துகள்
ஏற்றனர் மார்பு
கவிழ்ந்தன மருப்புக்
கலங்கினர்பலர்;


இவை சிற்றெண்.

அவருள், மலர்மலி புகலெழ அலர்மலி மணிபுரைநிமிர்தோள் பிணைஇ
யெருத்தோ டிமிலிடைத் தோன்றினன் தோன்றி
வருத்தினான் மன்றஅவ் வேறு;


இது முடுகியலடிவந்த கொச்சகம்.

ஏறெவ்வங் காணா எழுந்தார் எவன்கொலோ
வேறுடை நல்லார் பகை;
மடவரே நல்லாயர் மக்கள் நெருநல்3
அடலேற் றெருத்திறுத்தார்க் கண்டுமற் றின்று
முடலேறு கோட்சாற்று வார்;


இவையுங் கொச்சகம்.ஆங்கினி,

தனிச்சொல்.

தண்ணுமைப் பாணி தளரா தெழூஉக
பண்ணமை யின்சீர்க் குரவையுட் டெண்கண்ணித்
திண்தோள் திறலொளி மாயப்போர் மாமேனி
அந்துவ ராடைப் பொதுவனோ டாய்ந்த
முறுவலாள் மென்றோள்பா ராட்டிச் சிறுகுடி
மன்றம் பரந்த துரை"

(கலி 102)

இது சுரிதகம்.

பிறவும் இந்நிகரன கொள்க.

யாப்பினும் பொருளினும் வேறுபட்ட கொச்சகவொருபோகை அதன்பினோதினமையால் இதற்குங் காமப் பொருளே பெறப்பட்டது.

(143)

1.(பாடம்) பொருபுகர் நல்லேறு.

2.பாய்மார்.

3.(பாடம்) நெருநை.