செய்யுளியல்

456ஒருபொருள் நுதலிய வெள்ளடி இயலால்1
திரிபின்றி முடிவது2 கலிவெண் பாட்டே3
என்-னின். கலிவெண்பாவாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

ஈற்றடியளவும் ஒருபொருளைக் குறித்து வெள்ளடியியலாற் றிரிபின்றி முடிவது கலிவெண்பாட்டம் என்றவாறு.

கலிவெண்பாட்டெனினும் வெண்கலிப்பாட்டெனினும் ஒக்கும், வெள்ளடியியலானென்றமையான் வெண்டளையான்வந்து ஈற்றடி முச்சீரான் வருவனவும் பிறதளையான் வந்து ஈற்றடி முச்சீரான வருவனவுங் கொள்க.


உதாரணம்

"மரையா மரல்கவர மாரி வறப்ப
வரையோங் கருஞ்சுரத் தாரிடைச் செல்வோர்
சுரையம்பு மூழ்கச் சுருங்கிப் புரையோர்தம்
உண்ணீர் வறப்பப் புலர்வாடு நாவிற்குத்
தண்ணீர் பெறாஅத் தடுமாற் றருந்துயரங்
கண்ணீர் நனைக்குங் கடுமைய காடென்றால்
என்னீர் அறியாதீர் போல இவைகூறின்4
நின்னீர அல்ல நெடுந்தகாய் எம்மையும்
அன்பறச் சூழாதே ஆற்றிடை நும்மொடு
துன்பந் துணையாக நாடின் அதுவல்ல
தின்பமும் உண்டோ எமக்கு"

(கலி)

என வரும்.

இது வெண்டளையான் வந்த வெண்கலிப்பா.

அஃதேல் இது நெடுவெண்பாட்டிற்கு ஓதிய இலக்கணத்தான் வருதலிற்பஃறொடைவெண்பாவாம். வெண்கலிப்பா வென்றதென்னை யெனின், புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல் ஊடல் எனவுங் கைக்கிளை பெருந்திணை யெனவுஞ் சொல்லப்பட்ட பொருளேழனுள்ளும் யாதானு மொருபொருளைக் குறித்து ஏனைக்கலிப்பாக்கள் போலத் தரவுந் தாழிசையுந் தனித்தனி பொருளாக்கிச் சுரிதகத்தாற் றொகுத்துவருநிலைமைத் தன்றித் திரிபின்றி முடிவதனைக் கலிவெண்பா வெனவும், புறப்பொருட்கண் வரும் வெண்பாக்களைப் பஃறொடை வெண்பா வெனவும், பரிபாடற்கு உறுப்பாய் வரும் பஃறொடை வெண்பாக்களைப் பரிபாடலெனவும், கொச்சகக் கலிப்பாவிற் குறுப்பாய் வரும் பஃறொடைவெண்பாவைக் கொச்சகக் கலிப்பாவெனவும் கூறுதல் இவ்வாசிரியர் கருத்தென்று கொள்க. அன்னதாதல் ' நெடுவெண்பாட்டே குறுவெண்பாட்டே (செய்யுளியல் 114) என யாப்பினாலே வேறுபடுத்தாராகிக் ' கைக்கிளை பரிபாட்டங்கதச் செய்யுள் ' எனப் பொருளானும் இனத்தானும் வேறுபடுத்தோதினமையானுங் கொள்க.

"தீம்பால் கறந்த கலமாற்றிக் கன்றெல்லாம்
தாம்பிற் பிணித்து மனைநிறீஇ யாய்தந்த
பூங்கரை நீலம் புடைதாழ மெய்யசைஇப்
பாங்கரு முல்லையுந் தாய பாட்டங்கால் தோழிநம்
புல்லினத் தாயர் மகளிரோ டெல்லாம்
ஒருங்கு விளையாட அவ்வழி வந்த
குருந்தம்பூங் கண்ணிப் பொதுவன்மற்றென்னை
முற்றிழை ஏஎர் மடநல்லாய் நீயாடுஞ்
சிற்றில் புனைகோ சிறிதென்றான் எல்லாநீ
பெற்றேம்யா மென்று பிறர்செய்த இல்லிருப்பாய்
கற்ற திலைமன்ற காணென்றேன் முற்றிழாய்5
தாது சூழ் கூந்தல் தகைபெறத் தைஇய
கோதை புனைகோ நினக்கென்றான் எல்லாநீ
ஏதிலார் தந்தபூக் கொள்வாய் நனிமிகப்
பேதையை மன்ற பெரிதென்றேன் மாதராய்6
ஐய பிதிர்ந்த சுணங்கணி மென்முலைமேல்
தொய்யி லெழுதுகோ மற்றென்றான் யாம்பிறர்
செய்புற நோக்கி இருத்துமோ நீபெரிது
மையலை மாதோ விடுகென்றேன் தையலாய்
சொல்லிய வாறெல்லா மாறுமா றியான்பெயர்ப்ப
அல்லாந்தான் போலப் பெயர்ந்தான் அவனைநீ
யாயர் மகளி ரியல்புரைத் தெந்தையும்
யாயும் அறிய உரைத்தீயின் யானுற்ற
நோயுங் களைகுவை மன்"

(கலி)

என்னும் முல்லைக்கலி அயற்றளையான் வந்த கலிவெண்பா.
(144)

1. 'இயல் ' என்றதனான், வெண்பாஇலக்கணம் சிதையாதவற்றுக்கே ஒரு பொருள் நுதலவேண்டுவதெனவும், அவ்வாறன்றித் திரிந்து வருவன எல்லாம் ஒரு பொருள் நுதலா என்றும் கலிவெண்பா ஆம் எனவும் கூறியவாறு.

2.'திரிபின்றி முடியும் ' என்றதனானே ஒரு பொருளன்றிப் பல உறுப்புடைத்தாகித் திரிபு உடையதூஉம் கலிவெண்பாட்டுளதென்று கொள்ள வைத்தானாம்.(தொல். பொருள். 465. பேரா)

3.(பாடம்) வருவது.

4.(பாடம்) இவை கூறல்.

5. முற்றிய

6. ஆயிழாய்