என்-னின். கொச்சகக் கலியாமாறு உணர்த்துதல் நுதலிற்று. தரவும் போக்கும் இடையிடை மிடைந்தும் என்பது - தரவாகிய உறுப்புஞ் சுரிதகமாகிய உறுப்பு முதலுமுடிவும் வருதலின்றி இடையிடைவந்து தோன்றியுமென்றவாறு. உம்மையால் இயற்கைவழாமற் றோன்றியு மென்று கொள்ளப்படும். ஐஞ்சீரடுக்கியும் என்பது - ஐஞ்சீரடி பலவந்தும் என்றவாறு. உம்மையால் வாராதுமென்று கொள்க. ஆறுமெய்பெற்றும் என்பது - தரவு தாழிசை தனிச்சொல் சரிதகஞ் சொற்சீரடி முடுகியலடியென்னும் ஆறுறுப்பினையும் பெற்றும் என்றவாறு. உம்மையாற் பெறாதுமென்று கொள்க. வெண்பாவியலான் வெளிப்படத் தோன்றும் பாநிலைவகை என்பது - மேற்சொல்லப்பட்ட வுறுப்புக்களை யுடைத்தாகியும் இலதாகியும் வெண்பாவினியல்பினாற் புலப்படத்தோன்றும் பாநிலைவகை யென்றவாறு. புலப்படத் தோன்றுதலாவது ஏனையுறுப்புக்களில் வெண்பாமிகுதல் இன்னும் அதனானே பிற பாவடிகளும் வந்து வெண்பாவியலான் முடிதலுங் கொள்க. கொச்சகக்.. அறைந்தனரே என்பது - கொச்சகக் கலிப்பா வென்று இலக்கணமறிந்த புலவர் கூறினாரென்றவாறு. ஆறுமெய்பெற்றும் என்பதற்கு அராகமென்னும் உறுப்பைக்கூட்டி முடுகியலென்னும் உறுப்பைக் கழித்து உரைப்பதும் ஒன்று. உதாரணம்குறிஞ்சிக் கலியுள், "காமர் கடும்புனல் கலந்தெம்மோ டாடுவாள் தாமரைக் கண்புதைத் தஞ்சித் தளர்ந்ததனோ டொழுகலால் நீள்நாக நறுந்தண்டார் தயங்கப்பாய்ந் தருளினாற் பூணாக முறத்தழீஇப் போத்தந்தான் அகனகலம் வருமுலை புணர்ந்தன என்பதனால் என்தோழி அருமழை தரல்வேண்டில் தருகிற்கும் பெருமையளே; இது தரவு;இதனுள் இரண்டாமடி ஐஞ்சீரான் வந்தது. அவனுந்தான், எனல் இதணத் தகிற்புகை யுண்டியங்கும் வானூர் மதியம் வரைசேரின் அவ்வரைத் தேனின் இறாலென ஏணி இழைத்திருக்குங் கானகல் நாடன் மகன். இதனுள் முதற்கணின்றது கூன்.சிறுகுடி யீரேசிறுகுடி யீரே வள்ளிகீழ் வீழா வரைமிசைத் தேன்தொடா கொல்லை குரல்வாங்கி ஈனா மலைவாழ்நர் அல்ல புரிந்தொழுக லான்; இதன் முதல் ஆசிரியவடிகாந்தள் கடிகமழுங் கண்வாங் கிருஞ்சிலம்பின் வாங்கமை மென்தோட் குறவர் மடமகளிர் தாம்பிழையார் கேள்வர்த் தொழுதெழலால் தம்மையருந் தாம்பிழையார் தாந்தொடுத்த கோல்; இவை மூன்றுங் கொச்சகம்.எனவாங்கு, தனிச்சொல்.அறத்தொடு நின்றேனைக் கண்டு திறப்பட என்னையர்க் குய்த்துரைத்தாள் யாய்; இது வெள்ளைச் சுரிதகமாகி இடை வந்தது.அவரும், தெரிகணை நோக்கிச் சிலைநோக்கிக் கண்சேந் தொருபக லெல்லாம் உருத்தெழுந் தாறி இருவர்கட் குற்றமும் இல்லையால் என்று தெருமந்து சாய்த்தார் தலை; தெரியிழாய் நீயுநின் கேளும் புணர வரையுறை தெய்வம் உவப்ப உவந்து குரவை தழீஇயாம் ஆடக் குரவையுட் கொண்டு நிலைபாடிக் காண்: இவை யிரண்டுங் கொச்சகம்.நல்லாய். தனிச்சொல்.நன்னாள் தலைவரும் எல்லை நமர்மலைத் தந்நாண்தாந் தாங்குவா ரென்னோற் றனர்கொல்; இது பேரெண்.புனவேங்கைத் தாதுறைக்கும் பொன்னறை முன்றில் நனவிற் புணர்ச்சி நடக்குமாம் அன்றோ நனவிற் புணர்ச்சி நடக்கலும் ஆங்கே கனவிற் புணர்ச்சி கடிதுமாம் அன்றோ; விண்டோய்கன் னாடனும் நீயும் வதுவையுட் பண்டறியா தீர்போல் படர்கிற்பீர் மற்கொலோ பண்டறியா தீர்போல் படர்ந்தீர் பழங்கேண்மை கண்டறியா தேன்போற் கரக்கிற்பென் மற்கொலோ; இவை யிரண்டுந்தாழிசைமைதவழ் வெற்பன் மணஅணி காணாமற் கையாற் புதைபெறுஉங் கண்களும் கண்களோ;1 இதுபேரெண்.என்னைமன், நின்கண்ணாற் காண்பென்மன் யான்; நெய்தல் இதழுண்கண், நின்கண்ணா கென்கண்மன; இதுவுங் கொச்சகம். எனவாங்கு, தனிச்சொல்.நெறியறி செறிகுறி புரிதிரி பறியா வறிவனை முந்துறீஇத் தகைமிகு தொகைவகை யறியுஞ் சான்றவர் இனமாக வேய்புரை மென்றோட் பசலையும் அம்பலும் மாயப் புணர்ச்சியும் எல்லாம் உடனீங்கச் சேயுயர் வெற்பனும் வந்தனன் பூவெழில் உண்கணும் பொலிகமா இனியே". (கலித்.) இது சுரிதகம். இதனுள் முதலடி அறுசீர் முடுகியல்; இரண்டாவது ஐஞ்சீர் முடுகியல். இவ்வாறு வருவன கொச்சகக் கலிப்பா வெனப்படும். ஒத்தாழிசைக்குத் தாழிசையாகிய உறுப்பு மிக்குவந்தாற்போலக் கொச்சகக் கலிக்கும் வெண்பாவாகிய உறுப்பு மிக்குவரும் என்று கொள்க. இனிஈண்டோதப்பட்ட உறுப்புக்கள் குறைந்தும் மயங்கியும் மிக்கும் வரப்பெறும். அவை கலித்தொகையுட் கண்டுகொள்க. (145)
1.(பாடம்) கண்ணுங்கண் ணாகுமோ.
|