செய்யுளியல்

470ஒருபொருள் நுதலிய சூத்திரத் தானும்
இனமொழி கிளந்த ஓத்தி னானும்
பொதுமொழி கிளந்த படலத் தானும்
மூன்றுறுப் படக்கிய பிண்டத் தானும்என்று
ஆங்கனை மரபின் இயலும் என்ப.

என் - னின். மேல் தொகை கொடுக்கப்பட்ட நான்குமாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

ஒருபொருள் நுதலிய சூத்திரத்தானும் என்பது - ஆசிரியன் யாதானு மொருபொருளைக் குறித்துக்கூறுஞ் சூத்திரத்தானும் என்றவாறு.

இனமொழி கிளந்த ஒத்தினானும் என்பது - இனமாகிய பொருள்கள் சொல்லப்படும் ஓத்தினானும் என்றவாறு.

பொதுமொழி கிளந்த படலத்தானும் என்பது-மேற்சொல்லப்பட்ட இனங்கள் பலவற்றையுங் கூறப்படும் படலத்தானும் என்றவாறு.

மூன்றுறுப் படக்கிய பிண்டத்தானும் என்பது - இம்மூன்றனையும் உறுப்பாக அடக்கிய பிண்டத்தானும் என்றவாறு.

ஆங்கனை மரபின் இயலு மென்ப என்பது - அம்மரபினான் இயலும் நூலென்ப என்றவாறு.

அவற்றிற்கு இலக்கண முன்னர்க் கூறப்படும்.

(158)