செய்யுளியல்

471அவற்றுள்,
சூத்திரம் தானே
ஆடி நிழலின் அறியத் தோன்றி
நாடுதல் இன்றிப் பொருள்நனி விளங்க
யாப்பினுள் தோன்ற யாத்தமைப் பதுவே.
என் - னின். சூத்திரத்திற்கு இலக்கணமுணர்த்துதல் நுதலிற்று.

சூத்திரமாவது கண்ணாடியி னிழற்போல விளங்கத்தோன்றி ஆராயாமற் பொருள் நனிவிளங்குமாறு யாப்பின் கண்ணே தோன்ற யாப்ப தென்றவாறு.

ஆடிநிழலி னறியத் தோன்றுவதாவது - சூத்திரம் படித்த வளவிலே அதனாற் சொல்லப்படுகின்ற பொருள் ஒருங்கு தோற்றல்.

நாடுதலின்றிப் பொருணனி விளங்க யாத்தலாவது - அதன் கண் யாக்கப்பட்ட சொற்குப் பொருள் ஆராயாமற் புலப்படத்தோன்றுமாறு யாத்தல்.

உதாரணம்

" வேற்றுமை தாமே ஏழென மொழிப
விளிகொள் வதன்கண் விளியோ டெட்டே. "

(தொல். வேற்றுமையியல்)

என்றவழி யாப்பின்கண்ணே பொருடோன்ற யாத்தவாறுங் கண்ணாடி நிழற்போலக் கருதியபொருளுந் தோற்றியவாறுங் கண்டுகொள்க.

(159)