செய்யுளியல்

474மூன்றுறுப் படக்கிய தன்மைத் தாயின்
தோன்றுமொழிப் புலவர்அது பிண்டம்1 என்ப.
என் - னின். பிண்டமென்பது உணர்த்துதல் நுதலிற்று.

மூன்றுறுப்பினையும் அடக்கின தன்மைத்தாயின் அதனைப் பிண்டமென்று சொல்லுவர் என்றவாறு.

மூன்றுறுப்படக்குதலாவது சூத்திரம் பலவுண்டாகி ஓத்தும் படலமுமின்றாகிவரினும், ஓத்துப்பலவுண்டாகிப் படலமின்றிவரினும், படலம் பலவாகிவரினும், அதற்குப் பிண்டமென்று பெயராம் என்றவாறு.

அவற்றுட் சூத்திரத்தாற் பிண்டமாயிற்று இறையனார் களவியல். ஓத்தினாற் பிண்டமாயிற்று பன்னிருபடலம். அதிகாரத்தாற் பிண்டமாயிற்று இந்நூலென்று கொள்க. இவற்றைச் சிறுநூல் இடைநூல் பெருநூல் எனப்படும்.

(162)

1. ` அது பிண்டம் ' என்ப என்றதனால் பிண்டத்தினையும் அடக்கி நிற்பது வேறு பிண்டம் உளதென்பது. அது முதனூலாகிய அகத்தியமே போலும். என்னைஅஃது இயற்றமிழ் இசைத்தமிழ் நாடகத்தமிழ் என்னும் மூன்று பிண்டத்தினையும் அடக்கி நிற்றலின். (தொல். பொருள். 484. பேரா. )