செய்யுளியல்

481எழுத்தொடுஞ் சொல்லொடும் புணரா தாகிப்
பொருட்புறத் ததுவே குறிப்பு மொழியே.
என் - னின். குறிப்புமொழி ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

எழுத்தொடும் சொல்லொடும் புணராதாகிச் சொல்லினா னுணரப்படும் பொருளின் புறத்ததுவே குறிப்புமொழி என்றவாறு.

மேல் அங்கதமென்று சொல்லி ஈண்டுக் குறிப்புமொழி யென்றதனான் இச்சொல் வசைகுறித்து வருமென்றுகொள்க.

புகழ்குறித்து வந்தாற் குற்றமென்னையெனில். அதனை, வெளிப்படக் கூறக் கேட்டார்க்குந் தனக்கும் இன்பம் பயத்தலிற் குறிப்பினாற் கூறல் வேண்டுவது வசையென்று கொள்ளப்படும்.

(169)