செய்யுளியல்

482பாட்டிடைக்1 கலந்த பொருள வாகிப்
பாட்டின் இயல பண்ணத் திய்யே.2
என் - னின். பண்ணத்தி யாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

மேல் இத்துணையும் பாவும் பாவின்றி வழங்குவனவும் எடுத்தோதினார். இனிப் பிறநூலாசிரியர் விரித்துக் கூறின இசை நூலின் பாவினமாமாறு உணர்த்துதலின் இது., பாட்டிடைக் கலந்த பொருளவாகி என்பது - பாட்டின்கட் கலந்த பொருளையுடைத்தாகி யென்றவாறு.

எனவே, அவ்வடி பாவிற்குரிய பொருள் கொள்ளப்படும்.

பாட்டினியல பண்ணத்திய்யே என்பது - பாட்டுக்களின் இயல்பையுடையவாம் பண்ணைத் தோற்றுவிக்குஞ் செய்யுட்கள் என்றவாறு.

பண்ணைத் தோற்றுவித்தலாற் பண்ணத்தியென்றார்.

அவையாவன சிற்றிசையும் பேரிசையு முதலாக இசைத்தமிழில் ஓதப்படுவன. அவையாமாறு வருகின்ற சூத்திரத்தாற் கூறுப.

(170)

1. மெய்வழக்கல்லாத புறவழக்கினைப் பண்ணத்தி என்ப. இஃது எழுதும் பயிற்சி இல்லாத புற உறுப்புப் பொருள்களைப் பண்ணத்தி என்ப என்பது. அவையாவன: நாடகச் செய்யுளாகிய பாட்டும் மடையும் வஞ்சிப்பாட்டும் மோதிரப்பாட்டும் கடகண்டும் முதலாயின. (தொல்.பொருள்.492.பேரா.)

2. (பாடம்)பண்ணத்தி இயல்பே.