செய்யுளியல்

483அதுவே தானும் பிசியொடு மானும்.
என் - னின், மேற்சொல்லப்பட்டதனுள் ஓர் உதாரணம் உணர்த்துதல் நுதலிற்று.

மேற்சொல்லப்பட்ட பண்ணத்தி பிசியோடொத்த அளவிற்று என்றவாறு.

பிசியென்பது இரண்டடி அளவின்கண்ணே வருவதாதலின் இதுவும் இரண்டடியான் வருமென்று கொள்ளப்படும்.

உதாரணம்

"கொன்றை வேய்ந்த செல்வன் அடியை1
என்றும் ஏத்தித் தொழுவோம் நாமே.2

இது பிசியோடு ஒத்தவளவிற்றாகிப் பாலையாழென்னும் பண்ணிற்கு இலக்கணப் பாட்டார்கி வந்தமையிற் பண்ணத்தியாயிற்று. பிறவுமன்ன.

(171)

1. அடியினை.
2. யாமே