என் - னின். இதுவும் பண்ணத்தி பாகுபடுமாறு உணர்த்துதல் நுதலிற்று. பண்ணத்தியெனினும் பாவினமெனினு மொக்கும். `நாற்சீர் கொண்ட தடியெனப் படுமே' (செய்யுளியல் - 41) யென்றமையான் அடியென்பது நாற்சீரான் வருவதென்று கொள்க. நாற்சீரடியின் மிக்குவரும் பாட்டுப் பன்னிரண்டும் அவ்வழி அவ்வடியின் வேறுபட்டு வருவனவுங் கொள்ளப்படும் என்றவாறு. இதனாற் சொல்லியது இருசீரடி முதலிய எல்லாவடிகளானுமூன்றடிச் சிறுமையாக ஏறிவரும் பாவினம் என்றவாறாம். பன்னிரண்டாவன ஆசிரியம் வஞ்சி வெண்பா கலியெனச் சொல்லப்பட்ட நான்கு பாவினோடுந் தாழிசை துறை விருத்தமென்னு மூன்றினத்தையும் உறழப் பன்னிரண்டாம். அவற்றுள், தாழிசையாவது: - ஆசிரியத்தாழிசை, வஞ்சித்தாழிசை, வெண்டாழிசை, கலித்தாழிசை என நான்காம். துறையாவது :- ஆசிரியத்துறை, வஞ்சித்துறை, வெண்டுறை, கலித்துறை என நான்காம். விருத்தமாவது:- ஆசிரியவிருத்தம், வஞ்சிவிருத்தம், வெளிவிருத்தம், கலிவிருத்தம் என நான்காம். அவற்றுள் ஆசிரியத் தாழிசையாவது மூன்றடி யொத்துவருவது. "நீடற்க் வினையென்று நெஞ்சின் உள்ளி நிறைமலர்சாந் தொடுபுகையும் நீரு மேந்தி1 வீடற்குந் தன்மையின்2 விரைந்து சென்று விண்ணோடு மண்ணிடை3 நண்ணும் பெற்றி பாடற்கும் பணிதற்குந்தக்க தொல்சீர்ப் பகவன்ற னடியிரண்டும் பணிது நாமே 4 (யாப்.வி.ப.264) என வரும்அவ்வழி ஒருபொருள்மேல் மூன்றடுக்கி வருவன சிறப்புடைத்தென ஒரு சாரார் உதாரணங் காட்டுமாறு :- "கன்று குணிலாக் கனியுதிர்த்த மாயவன் இன்றுநம் மானுள் வருமே லவன்வாயிற் கொன்றையந் தீங்குழல் கேளாமோ தோழீ;
பாம்பு கயிறாக் கடல்கடைந்த மாயவன் ஈங்குநம் மானுள் வருமேல் அவன்வாயில் ஆம்பலந் தீங்குழல் கேளாமோதோழீ.
கொல்லையஞ் சாரற் குருந்தொசித்த மாயவன் எல்லைநம் மானுள் வருமேல் அவன்வாயில் முல்லையந் தீங்குழல் கேளாமோ தோழீ." (சிலப். ஆய்ச்சி) இவை மூன்றடியான் மூன்றடுக்கிவந்த ஆசிரியத் தாழிசை யென்றவாறு.இவை அளவடியான் வருதலானும் ஒத்து மூன்றாகிவருதலானும் இவ்வாசிரியர் மதத்தால் தரவின்றாகித் தாழிசை பெற்ற கொச்சக வொருபோகெனப்படும். மேற்காட்டியதே ஆசிரியத்தாழிசை. இனி, வஞ்சித்தாழிசையாவது குறளடி நான்கினால் ஒருபொருள் மேன் மூன்றடுக்கி வரும். "மடப்பிடியை மதவேழந் தடக்கையால் வெயில் மறைக்கும் இடைச்சுரம் இறந்தார்க்கே நடக்குமென் மனனேகாண்;
இரும்பிடியை இகல்வேழம் பெருங்கையால் வெயில்மறைக்கும் அருஞ்சுரம் இறந்தார்க்கே விரும்புமென் மனனேகாண்;
பேடையை இரும்போத்துத் தோகையால் வெயில்மறைக்கும் காடகம் இறந்தார்க்கே ஓடுமென் மனனேகாண்." (யாப். வி.ப.341) என வரும்.அஃதேல் இவை மூன்றடுக்கி வருதலிற் கொச்சக வொருபோகாதல் வேண்டுமெனின், அளவடியான் வாராமையான் ஆகாதென்க. இனி, வெண்டாழிசையாவது மூன்றடியான் வந்து வெண்பாப்போல இறும். அது "நண்பி தென்று தீய சொல்லார் முன்பு நின்று முனிவு செய்யார் அன்பு வேண்டு பவர்." (யாப். வி.ப.244) என வரும்.சிந்தியல் வெண்பா ஒருபொருள்மேல் மூன்றடுக்கி வருவதனை வெள்ளொத் தாழிசை யென்ப அது "அன்னாய் அறங்கொல் நலங்கிளர் சேட்சென்னி ஒன்னார் உடைபுறம் போல நலங்கவர்ந்து துன்னான் துறந்து விடல்;
ஏடி அறங்கொல் நலங்கிளர் சேட்சென்னி கூடார் உடைபுறம் போல நலங்கவர்ந்து நீடான் துறந்து விடல்;
பாவாய் அறங்கொல் நலங்கிளர் சேட்சென்னி மேவார் உடைபுறம் போல நலங்கவர்ந்து காவான் துறந்து விடல்." (யாப்.வி.ப.244) என வரும்.கலித்தாழிசையாவது அடிவரையின்றி ஒத்துவந்து ஈற்றடி சிலசீர்மிக்குங் குறைந்தும் வருவது. அது "வாள்வரி வேங்கை வழங்குஞ் சிறுநெறியெங் கேள்வரும் போழ்தின் எழால்வாழி வெண்திங்காள் கேள்வரும் போழ்தின் எழாதாய்க் குறா அலியரோ நீள்வரி நாகத் தெயிறே வாழி வெண்திங்காள்" (யாப்.வி.ப.330) என வரும்.இத்தாழிசை ஒருபொருள்மேல் மூன்றடுக்கிவரினுங் கொச்சக வொருபோ கெனப்படா; கலித்தாழிசை யெனப்படும்; ஈற்றடி மிக்கு வருதலான். இனி ஆசிரியத்துறையாவது நான்கடியாய் இடையிடை சீர் குறைந்து வரும். அது "கரைபொரு கான்யாற்றங் கல்லதர் எம்உள்ளி வருதிராயின் அரையிருள் யாமத் தடுபுலியோ நும்மஞ்சி யகன்று போக நரையுருமே றுங்கை வேலஞ்சு5 நும்மை வரையர மங்கையர் வௌவுதல் அஞ்சுதும் வாரலையோ" (யாப்.வி.ப.245) என வரும்.வஞ்சித்துறையாவது குறளடி நான்கினால் தனித்துவரும் அது "முல்லைவாய் முறுவலித்தன கொல்லைவாய்க் குருந்தீன்றன மல்லல்வான் மழைமுழங்கின செல்வர்தேர் வரவுகாண்குமே." (யாப்.வி.ப.341) என வரும்.இனி வெண்டுறையாவது மூன்றடிச் சிறுமையாக ஏழடிப் பெருமையாக வந்து இறுதியடிகளில் சில சீர் குறைந்துவரும். "குழலிசைய வண்டினங்கள் கோழிலைய செங்காந்தட் குலைமேற் பாய அழலெரியின் மூழ்கினவால் அந்தோ வளியவென் றயல்வாழ் மந்தி கலுழ்வனபோல் நெஞ்சயர்ந்து கல்லருவி தூஉம் நிழல்வரை நன்னாடன் நீப்பனோ அல்லன்." (யாப்.வி.ப.246) என வரும்.பிறவும் வந்தவழிக்காண்க. கலித்துறையாவது நெடிலடி நான்கினான் வருவது. அஃதாவது, ஐஞ்சீரான் வருவதும், பதினாறும் பதினேழும் எழுத்துப்பெற்று நான்கடியான் வருவனவுமாம். "யானுந் தோழியும் ஆயமும் ஆடுந் துறைநண்ணித் தானுந் தேரும் பாகனும் வந்தென் நலனுண்டான் தேனும் பாலும் போல்வன சொல்லிப் பிரிவானேல் கானும் புள்ளுங் கைதையும் எல்லாங் கரியன்றே." (யாப்.வி.ப.332) "நல்லார் பழிப்பில் எழிற்செம் பவளத்தை நாணநின்ற பொல்லா முகுத்தெங்கள் போதக மேபுர மூன்றெரித்த வில்லான் அளித்த விநாயக னேயென்று மெய்ம்மகிழ வல்லார் மனத்தன்றி மாட்டாள் இருக்க மலர்த்திருவே." (மூத்தநாயனார் திருவிரட்டை மணிமாலை.20) இது நேரசை முதலாகிப் பதினாறெழுத்தான் வந்தது. "கனிய நினைவொடு நாடொறுங் காதல் செயுமடியார்க்6 கினிய னவனொரு வின்னாங் கிலமெவ ரும்வணங்கப் பனிவெண் பிறைநறுங் கொன்றைச் சடைப்பலி தேரியற்கை முனிவன் சிறுவன் பெருவெங்கொல்7 யானை முகத்தவனே. (மூத்தநாயனார் திருவிரட்டை மணிமாலை) இது நிரையசை முதலாகிப் பதினேழெழுத்தான் வந்தது. இனி, ஆசிரிய விருத்தமாவது அறுசீரடி முதலாகிய மிக்க அடியினான் நான்கடியு மொத்துவரும். அது "இரைக்கும் அஞ்சிறைப் பறவைகள் எனப்பெயர் இனவண்டு புடைசூழ நுரைக்க ளென்னுமக் குழம்புகொண் டெதிர்ந்தெழ நுடங்கிய விலயத்தால் திரைக்க ரங்களிற் செழுமலைச் சந்தனத் திரள்களைக் கரைமேல்வைத் தரைக்கு மற்றிது குண்டகற் றிரையொடும் பொருதல தவியாதே." (சூளாமணி.கல்யாண.51) என வரும்.பிறவும் வந்தவழிக் காண்க. இனி வஞ்சிவிருத்தமாவது முச்சீரடி நான்காகிவரும். அது "இருது வேற்றுமை இன்மையால் சுருதி மேற்றுறக் கத்தினோ டரிது வேற்றுமை யாகவே கருது வேல்தடங் கையினாய்." (சூளாமணி.சீயவதை.170) என வரும்.இனி, வெளிவிருத்தமாவது நான்கடியானாயினும் மூன்றடியானாயினும் அடிதொறுந் தனிச் சொற் பெற்றுவரும். அது "ஆவா என்றே அஞ்சினர் ஆழ்ந்தார் - ஒருசாரார் கூகூ என்றே கூவிளி கொண்டார் - ஒருசாரார் மாமா வென்றே மாய்ந்தனர் நீந்தார் - ஒருசாரார் ஏகீர் நாய்கீர் என்செய்தும் என்றார் - ஒருசாரார்." என வரும்இது நான்கடியான் வந்தது. மூன்றடியான் வருவது வந்தவழிக் காண்க. இனி, கலிவிருத்தமாவது நாற்சீரடி நான்கினால் வரும். "தேம்பழுத் தினியநீர் மூன்றுந் தீம்பலா மேம்பழுத் தளிந்தன சுளையும் வேரியும் மாம்பழக் கனிகளு மதுத்தண் டீட்டமுந் தாம்பழுத் துளசில தவள மாடமே. (சூளாமணி. நகர.14) என வரும்.இவையெல்லாம் உரையிற்கோடல் என்பதனானும் பிறநூல் முடிந்தது தானுடம்படுத லென்பதனானுங் கொள்க. (172) 1. (பாடம்)நிறைமலரஞ்சாந்தமொடு புகையும் நீவி. 2. வீடற்குந் தன்மையினான். 3. மண்ணினிடை 4. அடியிணையைப் பற்றும் நாமே. 5. (பாடம்)வேலஞ்சுக. 6. படுமடியார்க். 7. வன்கொல்.
|