செய்யுளியல்

485கிளரியல் வகையிற் கிளந்தன தெரியின்
அளவியல் வகையே அனைவகைப் படுமே.
என் - னின். மேற்சொல்லப்பட்டன தொகுத்து உணர்த்துதல் நுதலிற்று.

ஈண்டுச் சொன்ன வகையினாற் சொல்லப்பட்டனவற்றை யாராயுங்காலத்து அவ்வியல்வகை யத்துணைப் பாகுபடும் என்றவாறு.

இதனாற் சொல்லியது செய்யுளாவது அடிவரையுள்ளனவும் அடி வரையில்லனவுமென இருவகைப்படுமென்பதூஉம் அடிவரையுள்ளன ஆசிரியம். வஞ்சி. வெண்பா, கலி எனவும்; தாழிசை, துறை, விருத்தமெனவும்; அடிவரையில்லன, நூல், உரை, பிசி, முதுமொழி; மந்திரம், குறிப்புமொழி என அறுவகைப் படுமென்பதூஉம் உணர்த்தியவாறு.

அஃதேல் மேல் அளவியல் வகையே அனைவகைப் படுமே என்ற சூத்திரமிகையாதல் வேண்டுமெனின், அது பாவிற்கு அடி வரையறுத்துக் கூறப்பட்டது. இது செய்யுள் இனைத்தென வரையறுத்துணர்த்திற்று.