செய்யுளியல்

488மறைவெளிப் படுதலுந் தமரிற் பெறுதலும்
இவைமுத லாகிய இயனெறி திரியாது
மலிவும்1 புலவியும் ஊடலும் உணர்வும்
பிரிவொடு புணர்ந்தது கற்பெனப் படுமே
என் - னின். கைகோள்வகையிற் கற்பாகிய கைகோள் உணர்த்துதல் நுதலிற்று.

களவொழுக்கம் வெளிப்படுதலுங் களவொழுக்கமின்றித் தமரானே பெறுதலுமென்று சொல்லப்பட்ட இவை முதலாகிய இயற்கை நெறியிற்றப்பாது மகிழ்தலும் புலத்தலும் ஊடலும் ஊடல் தீர்தலும் பிரிதலுமென்று சொல்லப்பட்ட இவற்றொடு கூடிவருவது கற்பென்று சொல்லப்படுவது என்றவாறு.

இயனெறி என்றதனாற் கரணத்தின் அமைதல் இன்றியமையாதென்று கொள்க.

(175)

1.மலிதல் என்பது இல்லொழுக்கமும் புணர்ச்சியும் முதலாயவற்றால் மகிழ்தல். புலவி என்பது புணர்ச்சியான் வந்த மகிழ்ச்சி குறைபடாமல் காலம் கருதிக்கொண்டு உய்ப்பதோர் உள்ள நிகழ்ச்சி. ஊடல் என்பது உள்ளத்து நிகழ்ந்ததனைக் குறிப்பு மொழியான் அன்றிக் கூற்றுமொழியான் உரைப்பது......ஊடல் நிகழ்ந்தவழி அதற்கு ஏதுவாகிய பொருளின்மை உணர்வித்தல் உணர்வெனப்படும்.......புலவிக்காயின் உணர்த்தல் வேண்டா, அது குளிர்ப்பக் கூறுலும் தளிர்ப்ப முயங்கலும் முதலாயவற்றான் நீங்குதலின்..........துனித்தல் என்பது வெறுத்தல். (தொல், பொருள், 499, பேரா.)