இஃது, உவம வகையான் ஐந்திணைக்கும் உரியதோர் இயல்பு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) உள்ளுறை உவமம் ஏனை உவமம் என - உள்ளுறைக்கண் வரும் உவமமும் ஒழிந்த உவமமும் என இருவகையாலும், திணை உணர்வகை தள்ளாது ஆகும். - திணை உணரும் வகை தப்பாதாகும். [ஏகாரம் ஈற்றசை.] உதாரணம் முன்னர்க் காட்டுதும். (49)
1.இனித் தள்ளாது என்றதனானே ' பாஅல் அஞ்செவி ' என்னும் பாலைக் கலியுள் தாழிசை மூன்றும் ஏனையுவமமாய் நின்று கருப்பொருளோடு கூடிச் சிறப்பியாது தானே திணைப்பொருள் தோன்றுவித்து நிற்பன போல்வனவும், ' கரைசேர் வேழம் கரும்பிற்பூக்கும், துறை கேழூரன் ' (ஐங்குறு - 12) என்றாற் போலக் கருப்பொருள் தானே உவமமாய் நின்று உள்ளுறைப்பொருள் தருவனவும்,பிறவும் வேறுபட வருவனவும் இதனான் அமைக்க. இது புறத்திற்கும் பொது. இதனான் உள்ளுறை உவமமும், ஏனை உவமமுமென உவமம் இரண்டே என்பது. (நச்சி.)
|