செய்யுளியல்

491பாணன் கூத்தன் விறலி பரத்தை
யாணஞ் சான்ற அறிவர் கண்டோர்
பேணுதகு சிறப்பிற் பார்ப்பான் முதலா
முன்னுறக் கிளந்த அறுவரொடு1 தொகைஇத்
தொன்னெறி மரபிற் கற்பிற் குரியர்.
என் - னின். கற்பின்கட் கூறத்தகுவாரை உணர்த்துதல் நுதலிற்று.

பாணன் முதலாகச் சொல்லப்பட்ட அறுவரும் மேற்சொல்லப்பட்ட பார்ப்பார் முதலிய அறுவருங்கூடப் பன்னிருவருங் கற்பின்கட் கூறுதற்குரியர் என்றவாறு.

`தொன்னெறி மரபிற் கற்பு' என்றதனான் அவர் குலந்தோறுந் தொன்றுபட்டு வருகின்ற நெறியையுடைத்தென்று கொள்க.

(178)

1.(பாடம்) கிளவியொடு.