என்-னின், இது தலைவற் குரியதோர் மரபு உணர்த்துதல் நுதலிற்று. தலைவியை யுடன்கொண்டுபோம் இடைச்சுரத்தின்கண் தலைவியைத் தலைவன் வழக்குநெறியாணையானே கூறுதற்குரியன் என்றவாறு. உம்மை எதிர்மறை . ஆணையென்பது ஆக்கினை; வடமொழித் திரிபு மெல்லிய காமநிகழுமிடத்து ஆக்கினை கூறப்பெறானாயினும் அவ்விடத்து வேண்டுமென்பது எடுத்தோதப்பட்டது. உதாரணம்"நீவிளை யாடுக சிறிதே யானே மழகளி றுரிஞ்சிய பராரை வேங்கை மணலிடு மருங்கின் இரும்புறம் பொருந்தி அமர்வரின் அஞ்சேன் பெயர்க்குவென் நுமர்வரின் மறைகுவன் மாஅ யோளே." (நற்றிணை.362) என்பதனுட் கண்டுகொள்க.மெல்லியமகளிர்முன் வன்மை கூறலாகாமையின் இது வழுவமைத்தவாறு. (182)
1.`நீதிநூல் வகையால் கிளத்தல்' என்பது கிழத்தி தன்தமர் இடைச் சுரத்திற் கண்ணுறின் அவர் கேட்பத் தலைவிக்குச் சொல்லுவானாய் வழக்கியல் கூறுதலும் உரியன் என்பது. (தொல், பொருள். 506. பேரா.)
|