செய்யுளியல்

501ஞாயிறு திங்கள் அறிவே நாணே
கடலே கானல் விலங்கே மரனே
புலம்புறு பொழுதே1 புள்ளே நெஞ்சே
அவையல பிறவு நுதலிய2 நெறியாற்
சொல்லுந போலவுங் கேட்குந போலவுஞ்
சோல்லியாங் கமையும் என்மனார் புலவர்.
என்-னின் .இதுவுங்கேட்டற் பொருண்மைக்கண் வருவதோர் மரபுவழுவமைத்தலை உணர்த்துதல் நுதலிற்று.

ஞாயிறு முதலாக நெஞ்ச ஈறாகச் சொல்லப்பட்ட பதினொன்றும் அத்தன்மைய பிறவுமாகிய மக்களல்லாத பொருள்கள் தாங்கருதிய நெறியினானே சொல்லுவனபோலவுங் கேட்குநபோலவுஞ் சொல்லியமையப்பெறும் என்றவாறு.

ஆங்கு - அசை.

"பழிதபு ஞாயிறே பாடறியா தார்கட்
கழியக் கதழ்வை யெனக்கேட்டு நின்னை
வழிபட் டிரக்குவேன் வந்தேனென் நெஞ்சம்
அழியத் துறந்தானைச் சீறுங்கால் என்னை
ஒழிய விடாதீமோ என்று."

(கலித்.143)


"மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேற்
காதலை வாழி மதி."
(குறள்.1118)


"உறுதி தூக்கத் தூங்கி அறிவே
சிறிதுநனி விரையல் என்னும் ஆயிடை."
(நற்றினை.294)


"நேர்ந்தநங் காதலர் நேமி நெடுந்திண்டேர்
ஊர்ந்த வழிசிதைய ஊர்கின்ற ஓதமே
பூந்தண் பொழிலே புணர்ந்தாடும் அன்னமே
ஈர்ந்தண் துறையே இதுதகா தென்னீரே."

(சிலப்.காணல்)

இதனுட் கடலுங் கானலும் புள்ளு மரனுங் கூறப்பட்டது.

"மாலைநீ,
தையெனக் கோவலர் தனிக்குழல் இசைகேட்டுப்
பையென்ற நெஞ்சத்தேம் பக்கம்பா ராட்டுவாய்."

(கலித்.108)


"வருந்தினை வாழிய நெஞ்சே."

(அகம்.79)

பிறவு மென்றதனான்.

"மன்றப் பனைமேல் மலைமாந் தளிரே நீ
தொன்றிவ் வுலகத்துக் கேட்கும் அறிதியோ
மென்தோள் ஞெகிழ்த்தான் தகையல்லால் யான்காணேன்
நன்றுதீ தென்று பிற."

(கலித்.142)

எனவும் இந்நிகரன கொள்க.

இத்துணையுங் கூறப்பட்டது கேட்போ ரியல்பு.

(188)

1.புலம்புறு பொழுதென்பது மாலையும் யாமமும் எற்பாடும், காரும் கூதிரும் பனியும் இளவேனிலும் பொல்வன.(தொல்,பொருள்,513.பேரா.)

2.(பாடம்) நுவலிய.