செய்யுளியல்

502ஒருநெறிப் பட்டாங் கோரியல் முடியுங்
கரும நிகழ்ச்சி இடமென மொழிப.
என்-னின் நிறுத்த முறையானே இடமாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

ஒருவழிப்பட்டு ஓரியல்பாக முடியும் வினை நிகழ்ச்சி இடமென்று சொல்லுவர் என்றவாறு.

நிகழ்ச்சி , நிகழ்ந்தவிடம்.

ஒருநெறிப் படுதலாவது - அகமாயினும் புறமாயினும் ஒரு பொருண்மேல் வருதல்.

ஓரியல் முடிதலாவது - அகத்தின்கட் களவென்றானும் கற்பென்றானும் அவற்றின் விரிவகையில் ஒன்றானும்பற்றி வருதல். புறத்தின்கண் நிரைகோடலானு மீட்டலானு மேற் செலவானும் எயில்வளைத்தலானும் யாதானு மோரியல்புபற்றி வருதல்.

கருமநிகழ்தலாவது-அப்பொருளைப்பற்றி யாதானு மொரு வினை நிகழுமிடம். இன்னுங் கருமநிகழ்ச்சி என்றதனால் தன்மை முன்னிலை படர்க்கையென்பனவுங் கொள்ளப்படும்.

"செல்லாமை உண்டேல் எணக்குரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க் குரை."

(குறள்.1151)

என்றவழிப் பிரிவுப் பொருண்மை நிகழும் இடமாயிற்று . முன்னின்றானைக் கூறுதலின் முன்னிலை யென்னும் இடமாயிற்று.

யாதானுமோர் கருமநிகழ்வழி அதற்காகும் இடத்தொடுங்கூட நிகழ்தல் வேண்டுமென்று இப்பொருள் கூறப்பட்டது.

ஒருநெறிப்படாதும் ஓரியன் முடியாதும் வருமிடம் வழுவாம். அஃதாவது, தலைமகளொடு புணர்தல்வேண்டித் தோழியை யிரந்து குறையுறுவான் அவ்விடத்திற்குத் தக்கவுரை கூறாது தன்னாற்றலும் பிறவுங்கூறுதல்.

"மெல்லியல் நல்லாருள் மென்மை அதுவிறந்
தொன்னாருள் கூற்றுட்கும் உட்குடைமை யெல்லாஞ்
சலவருட் சாலச் சலமே நலவருள்
நன்மை வரம்பாய் விடல்."

(நாலடி.188)

இதனானு மறிக. அன்றியும்.

"நெடும்புனலுள் வெல்லு முதலை அடும்புனலுள்
நீங்கி னதனைப் பிற."

(குறள்.495)

இதுவும் இடனறிதல்.

"உண்ணற்க கள்ளை உணிலுண்க சான்றோரால்
எண்ணப் படவேண்டா தார்."

(குறள்.922)

இது தன்மையானையும் முன்னின்றானையும் ஒழித்துப் படர்க்கை யானைத்தொழிற்படுத்துதல். உண்ணற்க வென்னும் படர்க்கைச்சொல் படர்க்கை பெயரொடு முடிந்தது. பிறவுமன்ன.

(189)