செய்யுளியல்

503இறப்பே நிகழ்வே எதிர தென்னுந்
திறத்தியல் மருங்கில் தெரிந்தனர் உணரப்1
பொருள்நிகழ் வுரைப்பது கால மாகும்.
என்-னின் .நிறுத்தமுறையானே காலமாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இறந்தகாலம் நிகழ்காலம் எதிர்காலமெனக் கூறப்பட்டியலும் பக்கத்தின் ஆராய்ந்து நோக்குமாறு பொருணிகழ்ச்சியைக் கூறுமது காலமாகும் என்றவாறு.

"முதுக்குறைந் தனளே முதுக்குறைந் தனளே
மலையன் ஒள்வேற் கண்ணி
முலையும் வாரா முதுக்குறைந் தனளே."


இஃது இறந்தகாலத்தின்கட் புணர்ச்சியுண்மை தோன்ற வந்தது.இனி,

"அண்ணாந் தேந்திய வனமுலை தளரினும்
பொன்னேர் மேனி மணியில் தாழ்ந்த
நன்னெடுங் கூந்தல் நரையொடு முடிப்பினும்
நீத்த லோம்புமதி பூக்கேழ் ஊர."

(நற்றிணை.10)

என்றவழி நிகழ்காலம் இளமைப் பருவமென்பது தோன்றவந்தது . இதனுள், நீத்தலோம்புமதி யென்பது எதிர்காலங் குறித்து நின்றது. இவ்வகையினாற் காலமுமிடமும் எல்லாச் செய்யுளின் கண்ணும் வருமென்று கொள்க.
(190)

1.(பாடம்)உள்ளப்.