செய்யுளியல்

504இதுநனி பயக்கும் இதன்மா றென்னுந்
தொகுநிலைக்1 கிளவி பயனெனப் படுமே.
என்-னின் .நிறுத்தமுறையானே பயனாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

யாதானும் ஒரு பொருளைக் கூறியவழி இதன் பின்பு மிதனைப்பயக்குமென விரித்துக்கூறாது முற்கூறிய சொல்லினானே தொகுத்துக்கூறுதல் பயனெனப்படும் என்றவாறு.

"சூரல் பம்பிய சிறுகான் யாறே
சூரர மகளிர் ஆரணங் கினரே
வாரல் வரினே யானஞ் சுவலே
சாரல் நாட நீவர லாறே."

இதனாற் பயன் வரைந்து கோடல் வேண்டும் என்பது.

"ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
பின்சாரப் பொய்யாமை நன்று."

(குறள்.323)

இதனாற் பயன் நன்மை வேண்டுவார் இவ்வாறு செய்தல் வேண்டுமென்றல்.

இவ்வகையினால் யாதானுமொரு செய்யுளாயினும் பயன்படக்கூறல் வேண்டுமென்பது கருதிப் பயனென ஒருபொருள் கூறினார்.

(191)

1.இதனானென்னும் தொகைநிலைக்.