செய்யுளியல்

505உய்த்துணர்1 வின்றித் தலைவரு பொருண்மையின்2
மெய்ப்பட முடித்து மெய்ப்பா டாகும்.
என்-னின் .நிறுத்தமுறையானே மெய்ப்பாடு ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

யாதானுமொன்றைக் கூறியவழி யதன்கட் பொருண்மையை விசாரித்துணர்தலன்றி அவ்விடத்து வரும் பொருண்மையானே மெய்ப்பாடு தோன்ற முடிப்பது மெய்ப்பாடென்னும் உறுப்பாம் என்றவாறு.

"ஐயோ எனின்யான் புலியஞ் சுவலே
அணைத்தனன் கொளினே அகன்மார்பெடுக்க வல்லேன்
என்போற் பெருவிதுப் புறுக நின்னை
இன்னாதுற்ற அறனில் கூற்றே
நிரைவளை முன்கை பற்றி
வரைநிழற் சேர்க நடத்திசிற் சிறிதே."

(புறம்.255)

இதனுள் அழுகையாகிய மெய்ப்பாடு புலப்பட வந்தவாறு கண்டுகொள்க.

செய்யுட் செய்வார் மெய்ப்பாடு தோன்றச் செய்தல் வேண்டுமென்பது கருத்து.

(192)

1.கவிப்பொருள் உணர்ந்தால் அதனானே சொல்லப்படு பொருள் உய்த்து வேறுகண்டாங்கு அறிதலை மெய்ப்பாடென்றான், அது தேவர் உலகம் கூறினும் அதனைக்கண்டாங்கறியச் செய்தல் செய்யுள் உறுப்பாம் என்றவாறு.(தொல்,பொருள்.516.பேரா.)

2. (பாடம்) பொருளான்.