செய்யுளியல்

507சொல்லொடுங் குறிப்பொடும் முடிவுகொள் இயற்கை
புல்லிய கிளவி எச்சம் ஆகும்.
என்-னின் நிறுத்தமுறையானே எச்சவகையாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

பிறிதோர் சொல்லொடும் பிறிதோர் குறிப்பொடும் முடிவுகொள்ளும் இயற்கையைப் பொருந்திய செய்யுள் எச்சமாகும் என்றவாறு.

எனவே சொல்லெச்சம் குறிப்பெச்சமென இருவகையாயின . அது எச்சவியலுட் பிரிநிலை வினை யென்னுஞ் சூத்திரத்துள் (தொல், சொல். எச்ச .34) பிரிநிலை யென்பது முதலாகச் சொல்லப்பட்ட எண்வகையானும் வருவன சொல்லெச்சமாம் குறிப்பென்றோதப்பட்டது குறிப்பெச்சமாம்.

(194)