செய்யுளியல்

510அவ்வவ்1 மாக்களும் விலங்கும் அன்றிப்
பிறவவண் வரினுந் திறவதின் நாடித்
தத்தம் இயலான் மரபொடு முடியின்
அத்திறந் தானே துறையெனப் படுமே.
என்-னின் ,நிறுத்தமுறையானே துறையாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

அகப்பொருளாகிய ஏழு பெருந்திணைக்கும் புறப்பொருளாகிய ஏழுபெருந்திணைக்குமுரிய மாந்தரும் பரந்து பட்ட மாவும் புள்ளும் , உம்மையால் மரமுதலாயினவும், பிறவவண் வரினுமென்றதனால் நிலம் நீர் தீ வளி முதலாயினவும் செய்யுட்கண் வருமிடத்துத் திறப்பாடுடைத்தாக ஆராய்ந்து தத்தமக்கேற்ற பண்போடும் பொருந்திய மரபோடும் முடியின், அவ்வாறு திறப்பாடுடைத்தாய் வருவது துறையென்று கூறப்படும் என்றவாறு.

(197)

1.(பாடம்)அவ்வம்.

2. இயலின்.