என் - னின் , ஒரூஉ வண்ணம் உணர்த்துதல் நுதலிற்று. ஒரூஉ வண்ணமாவது நீங்கின தொடையாகித் தொடுப்பது என்றவாறு. அது செந்தொடையாம். உதாரணம்"தொடி நெகிழ்ந் தனவே கண்பசந் தனவே யான்சென் றுரைப்பின் மாண்பின் றெவனோ சொல்லாய் வாழி தோழி வரைய முள்ளிற் பொதுளிய அலங்குகுலை நெடுவெதிர் பொங்குவா லிளமழை துவைப்ப மணிநிலா விரியுங் குன்றுகிழ வோற்கே." (யாப்.வி.ப.389) எனவரும்.(215)
1.(பாடம்)ஒரீஇத் தொடுக்கும்.
|