இது பெருந்திணை ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) ஏறிய மடல் திறம் - ஏறிய மடற்றிறமும், இளமை தீர்திறம் - இளமை தீர்திறமும், தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறம் - தேறுதலொழிந்த காமத்து மிகுதிறமும், மிக்க காமத்து மிடலொடு தொகைஇ - மிக்க காமத்து மாறாய திறனொடு கூட்டி, செப்பிய நான்கும் பெருந்திணைக்க குறிப்பு - சொல்லப்பட்ட நான்கு திறமும் பெருந்திணைக் கருத்து. கைக்கிளை புணராது நிகழும் என்றமையால், இது புணர்ந்தபின் நிகழும் என்று கொள்க. ஏறிய மடற்றிறம் தலைமகற்கே உரித்து. அது வருமாறு ; - " எழின்மருப் பெழில்வேழ மிகுதரு கடாத்தால் தொழின்மாறித் தலைவைத்த தோட்டிகை நிமிர்ந்தாங்கு அறிவுநம் அறிவாய்ந்த அடக்கமும் நாணொடு வறிதாகப் பிறரென்னை நகுபவும் நகுபுடன் மின்னவிர் நுடக்கமுங் களவும்போல் மெய்காட்டி என்னெஞ்சம் என்னொடு நில்லாமை நனிவௌவித் தன்னலங் கரந்தாளைத் தலைப்படுமா றெவன்கொலோ மணிப்பீலி சூட்டிய நூலொடு மற்றை அணிப்பூளை ஆவிரை யெருக்கொடு பிணித்தியாத்து மல்லலூர் மறுகின்கண் இவட்பாடு மிஃதொத்தன் எல்லீருங் கேட்டீமின் என்று;
படரும் பனையீன்ற மாவுஞ் சுடரிழை நல்கியாள் நல்கி யவை;
பொறையென் வரைத்தன்றிப் பூநுதல் ஈத்த நிறைஅழி காமநோய் நீந்தி அறையுற்ற உப்பியல் பாவை உறையுற் றதுபோல உக்கு விடும்என் உயிர்; பூளை பொலமலர் ஆவிரை வேய்வென்ற தோளாள் எமக்கீத்த பூ ; உரித்தென் வரைத்தன்றி ஒள்ளிழை தந்த பரிசழி பைதல்நோய் மூழ்கி எரிபரந்த நெய்யுண் மெழுகின் நிலையாது பைபயத் தேயும் அளித்தென் னுயிர் ; இளையாரும் ஏதி லவரும் உளையயான் உற்ற துசாவுந் துணை ;
என்றியான் பாடக் கேட்டு அன்புறு கிளவியாள் அருளிவந் தளித்தலின் துன்பத்தில் துணையாய மடல்இனி இவட்பெற இன்பத்துள் இடம்படலென் றிரங்கினள் அன்புற்று அடங்கருந் தோற்றத்து அருந்தவ முயன்றோர்தம் உடம்பொழித்து உயருல கினிதுபெற் றாங்கே." ( கலித் . நெய் .21) இளமை தீர் திறமாவது , இளமை நீங்கிய திறத்தின்கண் நிகழ்வது அது மூவகைப்படும் ; தலைமகன் முதியனாகித் தலைமகள் இளையளாதலும் தலைமகள் முதியளாகித் தலைமகன் இளையனாதலும் , இவ்விருவரும் இளமைப் பருவம் நீங்கியவழி அறத்தின் மேல் மனம் நிகழ்தலன்றிக் காமத்தின்மேல் மனம் நிகழ்தலும் என. உதாரணம்"உளைத்தவர் கூறும் உரையெல்லாம் நிற்க முளைத்த முறுவலார்க் கெல்லாம் - விளைத்த பழங்கள் அனைத்தாய்ப் படுஇளி செய்யும் முழங்கு புனலூரன் மூப்பு." (புறப். இருபாற் பெருந்திணை . 14 ) இதனுள் தலைமகன் இளமை தீர் திறம் வந்தவாறு காண்க . "அரும்பிற்கு முண்டோ அலரது நாற்றம் பெருந்தோள் விறலி பிணங்கல் - கரும்போடு அதிரும் புனலூரற்கு ஆரமிழ்தம் - அன்றோ முதிரும் முலையார் முயக்கு " ( புறப் . இருபாற்பெருந்திணை .13 ) இதனுள் தலைமகள் இளமை தீர் திறம் வந்தவாறு காண்க. "ஆண்டலைக் கீன்ற பறழ்மகனே நீயெம்மை வேண்டுவல் என்று விலக்கினை நின்போல்வார் தீண்டப் பெறுபவோ மற்று . " (கலித் மருதம் . 29 ) எனவும், " உக்கத்து மேலும் நடுஉயர்ந்து வாய்வாய கொக்குரித் தன்ன கொடுமடாய் நின்னையான் புக்ககலம் புல்லினெஞ் சூன்றும் புறம்புல்லின் அக்குளுத்துப் புல்லலும் ஆற்றேன் அருளீமோ பக்கத்துப் 1புல்லச் சிறிது " ( கலித் . மருதம் . 29 ) எனவும் முறையே தலைமகன் தலைமகள் ஆவார் இருவர் இளமை தீர் திறம் வந்தவாறு காண்க . தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறமாவது : தெளிவு ஒழிந்த காமத்தின் கண்ணே மிகுதலும் என்றவறு. இது பெரும்பான்மை தலைமகட்கே உரித்து , உதாரணம்"புரிவுண்ட புணர்ச்சியுள் புல்லாரா மாத்திரை அருகுவித் தொருவரை அகற்றலில் தெரிவார்கண் செயநின்ற பண்ணினுள் செவிசுவை கொள்ளாது2 நயனின்ற பொருள்கெடப் புரியறு நரம்பினும் பயனின்று மன்றம்ம காமம் இவள்மன்னும் ஒண்ணுதல் ஆயத்தார் ஓராங்குத் திளைப்பினும் முள்நுனை தோன்றாமை முறுவல்கொண் டடக்கித்தன் கண்ணினும் முகத்தினும் நகுபவள் பெண்ணின்றி யாவரும் தண்குரல் கேட்ப நிரைவெண்பல் மீயுயர் தோன்ற நகாஅநக் காங்கே பூவுயிர்த் தன்ன புகழ்சால் எழில்உண்கண் ஆயிதழ் மல்க அழும் ;
ஓஒ! அழிதகப் பாராதே அல்லல் குறுகினம் காண்பாம் கனங்குழை பண்பு ;
என்று , எல்லீரும் என் செய்தீர் என்னை நகுதிரோ நல்ல நகாஅலிர் மற்கொலோ யானுற்ற அல்லல் உறீஇயான் மாய மலர்மார்பு புல்லிப் புணரப் பெறின்; எல்லாநீ ; உற்ற தெவனோமற் றென்றீரேல் எற்சிதை செய்தான் இவன்என உற்ற திதுவென எய்த உரைக்கும் உரனகத் துண்டாயின் பைதல வாகிப் பசக்குவ மன்னோவென் நெய்தல் மலரன்ன கண் ;
கோடுவாய் கூடாப் பிறையைப் பிறிதொன்று நாடுவேன் கண்டனென் சிற்றிலுள் கண்டாங்கே ஆடையான் மூஉய் அகப்படுப்பேன் சூடிய காணான் திரிதருங் கொல்லோ மணிமிடற்று மாண்மலர்க் கொன்றை யவன்;
தெள்ளியேம் என்றுரைத்துத் தேராது ஒருநிலையே வள்ளியை ஆகென நெஞ்சை வலியுறீஇ உள்ளி வருகுவர் கொல்லோ உளைந்தியான் எள்ளி இருக்குவேன் மற்கொலோ நள்ளிருள் மாந்தர் கடிகொண்ட கங்குற் கனவினால் தோன்றினன் ஆகத் தொடுத்தேன்மன் யான் தன்னைப்3 பையெனக் காண்கு விழிப்பயான் பற்றிய கையுளே மாய்ந்தான் கரந்து;
கதிர்பகா ஞாயிறே கல்சேர்தி ஆயின் அவரை நினைத்து நிறுத்தென்கை நீட்டித் தருகுவை ஆயின் தவிருமென் நெஞ்சத்து உயிர் திரியா மாட்டிய தீ ;
மையில் கடரே மலைசேர்தி நீயாயின் பௌவநீர்த் தோன்றிப் பகல்செய்யு மாத்திரை கைவிளக் காகக் கதிர்சில தாராய்என் தொய்யில் சிதைத்தானைத் தேர்கு;
சிதைத்தானைச் செய்வ தெவன்கொலோ எம்மை நயந்து நலஞ்சிதைத் தான்;
மன்றப் பனைமேல் 4மலைமாந் தளிரேநீ தொன்றில் உலகத்துக் கேட்டும் அறிதியோ மென்றோள் ஞெகிழ்த்தான் தகையல்லால் யான்காணேன் நன்றுதீ தென்று பிற ;
நோயெரி ஆகச் சுடினுஞ் சுழற்றியென் ஆயிதழ் உள்ளே கரப்பன் கரந்தாங்கே நோயுறு வெந்நீர் தெளிப்பின் தலைக்கொண்டு வேவ தளித்திவ் வுலகு. மெலியப் பொறுத்தேன் களைந்தீமின் சான்றீர் நலிதருங் காமமுங் கௌவையும் என்றிவ் வலிதின் உயிர்காவாத் தூங்கியாங் கென்னை நலியும் விழுமம் இரண்டு;
எனப்பாடி, இனைந்துநொந் தழுதனள் நினைந்துநீடு உயிர்த்தனள் எல்லையும் இரவும் கழிந்தவென் றெண்ணி எல்லிரா நல்கிய கேள்வன் இவன்மன்ற மெல்ல மணியுட் பரந்தநீர் போலத் துணிபாங் கலஞ்சிதை இல்லத்துக் காழ்கொண்டு தேற்றுக் கலங்கிய நீர்போல் தெளிந்து நலம்பெற்றாள் நல்லெழின் மார்பனைச் சார்ந்து . " ( கலித் - நெய் . 25) மிக்க காமத்து மிடலாவது : ஐந்திணைக்கண் நிகழும் காமத்தின் மாறுபட்டு வருவது . அஃதாவது , வற்புறுத்துந் துணையின்றிச் செலவழுங்குதலும் , ஆற்றருமை கூறுதலும் இழிந்திரத்து கூறுதலும், இடையூறுகிளத்தலும் அஞ்சிக்கூறுதலும், மனைவி விடுத்தலிற் பிறள்வயிற் சேறலும், இன்னோரன்ன ஆண்பாற்கிளவியும் , முன்னுறச் செப்பலும் , பின்னிலை முயல்தலும் ' கணவனுள்வழி இரவுத்தலைசேறலும் , பருவம் மயங்கலும் , இன்னோரன்ன பெண்பாற் கிளவியும் , குற்றிசையும் ; குறுங்கலியும் இன்னோரன்ன பெண்பாற் கிளவியும் , குற்றிசையும் ; குறுங்கலியும் இன்னோரன்ன பிறவுமாகிய ஒத்த அன்பின் மாறுபட்டு வருவன எல்லாம் கொள்ளப்படும் . அவற்றுட் சில வருமாறு :- " நடுங்கி நறுநுதலாள் நன்னலம்பீர் பூப்ப ஒடுங்கி உயங்கல் ஒழியக் - கடுங்கணை வில்லேர் உழவர் விடரோங்கு மாமலைச் செல்லேம் ஒழிக செலவு." ( புறப் . இருபாற்பெருந்தணை . 1) இது செலவழுங்குதல். " பணையாய் அறைமுழங்கும் பாயருவி நாடன் பிணையார மார்பம் பிணையத் - துணையாய்க் கழிகாமம் உய்ப்பக் கனையிருட்கண் செல்வேன் வழிகாண மின்னுக வான் . " ( புறப் . பெருந்திணை - 1) இஃது இரவுத்தலைச் சேறல். " பெரும்பணை மென்தோள் பிரிந்தார்எம் உள்ளி வரும்பருவம் அன்றுகொல் ஆம்கொல் - கரும்பிமிரும் பூமலி கொன்றை புறவெலாம் பொன்மலரும் மாமயிலும் ஆலும் மலை . " ( புறப் . இருபாற்பெருந்திணை-6) இது பருவமயங்கல். பிறவும் வந்தவழிக் கண்டுகொள்க மெய்ப் பாட்டியலுள் "இன்பத்தை வெறுத்தல்" ( மெய்ப்பாடு - 22 ) முதலாக நிகழ்பவை பெருளாக வருங்கிளவியும் இதன் பகுதியாகக் கொள்க. (54)
(பாடம்) 1. புல்லல். 2. கொள்ளாமை. (பாடம்) 3. யான்றளைஇப் 4. பணைமேல் .
|