அகத்திணை இயல்

56நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்
பாடல் சான்ற புலனெறி வழக்கம்
கலியே பரிபாட்டு ஆயிரு பாவினும்1
உரிய தாகும் என்மனார் புலவர் .

இதுவும் அகத்திணைக்கு இன்றியமையாத செய்யுளை வரையறுத்து உணர்த்துதல் நுதலிற்று.

(இ-ள்) நாடக வழக்காவது , சுவைபட வருவனவெல்லாம் ஓரிடத்து வந்தனவாகத் தொகுத்துக் கூறுதல் . அஃதாவது செல்வத்தானும் , குலத்தானும் ஒழுக்கத்தானும் , அன்பினானும் ஒத்தார் இருவராய்த் தமரின் நீங்கித் தனியிடத்து எதிர்ப்பட்டார் எனவும் , அவ்வழிக் கொடுப்போரு மின்றி அடுப்போரு மின்றி வேட்கை மிகுதியாற் புணர்ந்தார் எனவும் , பின்னும் அவர் களவொழுக்கம் நடத்தி இலக்கண வகையான் வரைந்தெய்தினார் எனவும் , பிறவும் இந்நிகரனவாகிச் சுவைபட வருவனவெல்லாம் ஒருங்கு வந்தனவாகக் கூறுதல் .

உலகியல் வழக்காவது , உலகத்தார் ஒழுகலாற்றோடு ஒத்து வருவது.

பாடல் சான்ற புலன் நெறி வழக்கமாவது , இவ்விருவகையானும் பாடல் சான்ற கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய்க் கூறப்படுகின்ற அகப்பொருள்.

கலியே பரிபாட்டு ஆஇருபாவினும் உரியது ஆகும் என்மனார் புலவர் என்றது , கலியும் பரிபாடலும் என்னும் இரண்டு பாவிலும் உரிமையுடைத்தாம் என்று உரைப்பர் புலவர் என்றவாறு .

எனவே இவை இன்றியமையாதன என்றவாறு . ஒழிந்த பாக்கள் இத்துணை அகப்பொருட்கு உரியவாய் வருதலின்றிப் புறப்பொருட்கும் உரியவாய் வருதலின் ஓதாராயினர் . புறப்பொருள் உலகியல்பானன்றி வாராமையின் , அது நாடக வழக்கம் அன்றாயிற்று.

(56)

(பாடம் )1.பாங்கினும் .