என்-னின். இளமைப்பெயரை வரையறுத்து உணர்த்துதல் நுதலிற்று. சொல்லிப்போந்த மரபுடையனவன்றிச் சொல்ல வேண்டுமரபுடையனவற்றிற்குஞ் சொல்லுமிடத்து இவை தாமே இளமைப்பெயர் என்றவாறு. என்பது என்சொன்னவாறோவெனின் . பரந்துபட்டவுயிர்த் தன்மையெல்லாம் ஈண்டு ஓதப்பட்டனவல்ல, எடுத்தோதாதனவற்றிற்கு ஈண்டு ஓதப்பட்ட இளமைப் பெயரல்லது பிற பெயரின்மையின், இவற்றுள் ஏற்பனவற்றோடு கூட்டியுரைக்க என்றவாறாம். இத்துணையும் கூறப்பட்ட சூத்திரத்திற்கு. உதாரணம் "பறவைதம் பார்ப்புள்ள." (கலித்.119) "வெள்ளாங் குருகின் பிள்ளையும் பலவே." "யாமைப் பார்ப்பின் அன்ன." (குறுந்.152) "தன்பார்ப்புத் தின்னும் பண்பின் முதலை." (ஐங்குறு.41) பார்ப்பு, பிள்ளை பிறவும் பறப்பன ஊர்வனவெல்லாம் இவ்வகையினாற் கூறுப. நடப்பனவற்றுள், மூங்காக்குட்டி, மூங்காப்பறழ், வெருகுக்குட்டி, வெருகுப்பறழ்; எலிக்குட்டி, எலிப்பறழ்; அணிற்குட்டி, அணிற்பறழ், நாய்க்குட்டி, நாய்க்குருளை; நரிக்குட்டி, நரிக்குருளை; நரிப்பறழ், நரிப்பிள்ளை, பன்றிக்குட்டி, பன்றிக்குருளை; பன்றிப்பறழ், பன்றிப்பிள்ளை; புலிக்குட்டி, புலிக்குருளை; புலிப்பறழ், புலிப்பிள்ளை; குரங்குக்குட்டி, குரக்குமக; குரக்குப்பிள்ளை, குரக்குப் பார்ப்பு; குரக்குப்பறழ்; குதிரைமறி, குதிரைக்கன்று; நவ்விமறி; உழைமறி; புல்வாய்மறி, யானைக்கன்று; குரக்குக் குழவி, ஊக முசுவென்பனவும் இவ்வாறே கொள்க. யாட்டுமறி, யானைக்குழவி, கழுதைக்கன்று; கடமைக்கன்று, கடமைக்குழவி; ஆன்கன்று, ஆன்குழவி; எருமைக்கன்று; எருமைக்குழவி , மரைக்கன்று , மரைக்குழவி , கவரிக்கன்று , கராகக்கன்று : ஒட்டகக்கன்று; மக்கட்குழவி, மக்கண்மக; தெங்கம்பிள்ளை; கமுகங்கன்று; கருப்பபோத்து , ஓரறிவுயிர்க்கட் குழவியென்பது வந்தவழிக் கண்டுகொள்க. இனி அவையல்லது பிறவில்லை யென்றமையின் , ஒன்றற்குரியவற்றை ஒன்றற்குரித்தாக்கி வழங்குவனவுஞ் சிறுபான்மை கொள்ளப்படும் . கழுதை மறியென்பனவும் `பிள்ளை வெருகிற் கல்கிரையாகி ' ( குறுந் 17) என்றாற்போலவும சான்றோர் செய்யுளகத்து வருவன கடியப்படா வென்றவாறு , எடுத்தோதாதது பெரும்பான்மை. இனி எடுத்தோதாதன: சிங்கம் புலிப்பாற்படும், உடும்பு, ஓந்தி, பல்லி அணிற்பாற்படும்: நாவியென்பது மூங்காவின் பாற்படும் பிறவும் இவ்வகையின் ஏற்பன கொள்க. (26)
|